

காபுல்,
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கியதையடுத்து, அந்நாட்டில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். தலைநகர் காபுல் உள்பட பல முக்கிய நகரங்களை தலிபான்கள் அடுத்தடுத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் சுற்றி வளைக்கப்பட்டதால் அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி விமானம் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேறினார். அவர் தஜிகிஸ்தான் நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அம்ருல்லா சாலே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆப்கானிஸ்தான் நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாட்டின் அதிபர் நாட்டை விட்டு வெளியேறினாலோ, தப்பிச் சென்றாலோ, உயிரிழந்தாலோ அல்லது பதவியை ராஜினாமா செய்தாலோ துணை அதிபர் நாட்டின் அதிபராக பொறுப்பு வகிக்க வேண்டும். தற்போது நாட்டில் நான் உள்ளதால், நானே நாட்டின் அதிபர் பொறுப்பை ஏற்க வேண்டும். அனைத்து தலைவர்களும் தங்கள் ஆதரவை தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.