

ஹனோய்,
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசுமுறை பயணமாக வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு சென்றுள்ளார். தற்போது வியட்நாமில் இருக்கும் அவர் நேற்று அங்குள்ள குவாங் நாம் மாகாணத்துக்கு உட்பட்ட டய் பு கிராமத்துக்கு அருகே உள்ள பழமையான இந்து கோவிலுக்கு சென்றார். அங்கு அவர் தனது வருகையின் நினைவாக மரக்கன்று ஒன்றையும் நட்டார்.
இந்திய கலாசாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் என் மகன் கோவில் காம்ப்ளக்ஸ் என அழைக்கப்படும் இந்த கோவிலில் கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் சிவன் சிலைகள் நிறுவப்பட்டு உள்ளன. கி.பி. 4 மற்றும் 14-ம் நூற்றாண்டுக்கு இடையே சம்பா பேரரசர்களால் கட்டப்பட்ட இந்த கோவில் தற்போது பாழடைந்து காணப்படுகிறது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் வருகையையொட்டி அந்த கோவிலில் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சிகளை பார்வையிட்ட ராம்நாத் கோவிந்த், அவற்றை ஏற்பாடு செய்தவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த தகவல்களை வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.