நாடு கடத்தக்கோரிய வழக்கு: விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்

விஜய் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கில் இறுதி விசாரணை இன்று தொடங்குகிறது; வழக்கு விசாரணைக்காக லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆஜர் ஆனார்.
நாடு கடத்தக்கோரிய வழக்கு: விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்
Published on

லண்டன்,

இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, அவற்றை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். அவர் மீது இந்தியாவின் பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார்.

அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு இங்கிலாந்து அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி அவரை ஸ்காட்லாந்து போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை நாடு கடத்தக்கோரி லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று முதல் வருகிற 14ந்தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. தலைமை மாஜிஸ்திரேட்டு எம்மா லூயிஸ் அர்பத்னோட் முன்னிலையில் நடைபெறும் இந்த வழக்கு விசாரணைக்காக விஜய் மல்லையா கோர்ட்டில் ஆஜரானார். கோர்ட்டில் ஆஜராக வந்தபோது, விஜய் மல்லையா சிரித்த முகத்துடன் காணப்பட்டார். கோர்ட் முன்பு கூடியிருந்த பத்திரிகையாளர்களை பார்த்து கை அசைத்தவாறே விஜய் மல்லையா சென்றார். கோர்ட்டில், தீ எச்சரிக்கை அபாய ஒலி எழும்பியதால், வழக்கு விசாரணை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் இங்கிலாந்து அரசின் வழக்கு சேவை மையம் ஆஜராகிறது. நாடு கடத்தல் வழக்கில் புகழ்பெற்ற மார்க் சம்மர்ஸ் தலைமையிலான குழுவினர் இந்த வழக்கில் இந்தியா சார்பில் வாதிடுகின்றனர். அதேநேரம் மல்லையா சார்பில் கிளேர் மாண்ட்கோமெரி ஆஜராகிறார். இவர் கிரிமினல் மற்றும் மோசடி வழக்குகளுக்கு புகழ்பெற்றவர் ஆவார்.இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த ஆண்டு (2018) ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com