

சாண்டியாகோ,
லத்தீன் அமெரிக்க நாடான சிலியில், மெட்ரோ ரெயில் கட்டணத்தை அந்நாட்டு அரசு உயர்த்தியது. எரிபொருட்கள் விலை உயர்வு மற்றும் அந்நாட்டு நாணயமான பீசோவின் மதிப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அரசு விளக்கம் அளித்தது.
ஆனால் இந்த கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை தலைநகர் சாண்டியாகோவில் நடைபெற்ற போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. அதனை தொடர்ந்து அங்கு அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டது.
மேலும் மெட்ரோ ரெயில் கட்டண உயர்வு ரத்து செய்யப்படுவதாக அதிபர் செபாஸ்டியன் பினெரா அறிவித்தார். ஆனாலும் போராட்டம் ஓயவில்லை. 2-வது நாளாக நேற்று முன்தினமும் சாண்டியாகோவில் மக்கள் பெரும் திரளாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தியதோடு, பஸ்களுக்கு தீவைத்தனர். இதையடுத்து, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு தடியடியும் நடத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதற்கிடையே போராட்டக்காரர்கள் சாண்டியாகோ நகரில் உள்ள ஒரு சூப்பர்மார்க்கெட்டுக்குள் புகுந்து தீவைத்தனர். இதில் சூப்பர்மார்க்கெட் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
இதில் தீயில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். இதனால் சாண்டியாகோ நகர் முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நகரம் முழுவதும் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.