ஷேக் ஹசீனா சொந்த ஊரில் வன்முறை: போலீஸ் வாகனங்களுக்கு தீ வைப்பு

வரும் டிசம்பர் மாதம் வங்காளதேசத்துக்கு திரும்பி சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளப் போவதாக ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்
ஷேக் ஹசீனா  சொந்த ஊரில் வன்முறை:  போலீஸ் வாகனங்களுக்கு தீ வைப்பு
Published on: 

வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு திரும்புவதற்கு ஆதரவு தெரிவித்து அவரது சொந்த ஊரில் அவாமி லீக் கட்சியினர் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்தியாவில் வசிக்கும் ஷேக் ஹசீனா

வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு மாணவர்கள் நடத்திய போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு வந்தார். அன்றிலிருந்து அவர் இந்தியாவில் வசித்து வருகிறார். இதற்கிடையே, கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறை தொடர்பான வழக்கில், வங்காளதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஷேக் ஹசீனாவுக்கு அவர் இல்லாத நிலையில் மரண தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பையும் குற்றச்சாட்டுகளையும் ஹசீனா நிராகரித்துள்ளார்.

டிசம்பரில் நாடு திரும்ப திட்டம்

இந்த நிலையில், வரும் டிசம்பர் மாதம் வங்காளதேசத்துக்கு திரும்பி சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளப் போவதாக ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். இதற்காக புதிய பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டை வழங்கும்படி அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.ஆனால், அவரை இந்தியாவில் இருந்து நாடு கடத்தி அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை வங்காளதேச அரசு மேற்கொண்டு வருகிறது.

வன்முறையாக மாறிய போராட்டம்

இதற்கிடையே, ஷேக் ஹசீனாவின் சொந்த மாவட்டமான கோபால்கஞ்சில் அவரது அவாமி லீக் கட்சியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கானோர் திரண்டு நடத்திய இந்தப் போராட்டத்தில் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. போலீஸ் சோதனைச் சாவடியும் சேதப்படுத்தப்பட்டது. மேலும், ஹசீனா ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னத்தையும் போராட்டக்காரர்கள் இடித்து சேதப்படுத்தினர். போலீசாரின் தடுப்புகளையும் உடைத்துக்கொண்டு சாலைகளில் நுழைந்தனர்.

பாதுகாப்பு அதிகரிப்பு

இந்த வன்முறையைத் தொடர்ந்து கோபால்கஞ்ச் பகுதியில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீசாரும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். ஹசீனாவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று அவாமி லீக் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதனால் வங்காளதேசத்தில் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.

X