இங்கிலாந்தில் போராட்டத்தில் வன்முறை; 100 பேர் கைது

இங்கிலாந்தில் போராட்டத்தில் வன்முறை ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
இங்கிலாந்தில் போராட்டத்தில் வன்முறை; 100 பேர் கைது
Published on

லண்டன்,

அமெரிக்காவில் போலீஸாரால் கைது செய்யப்பட்டபோது கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்ற வாலிபர் உயிரிழந்ததைக் கண்டித்து அந்த நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக, உலகின் பல்வேறு பகுதிகளில் நிறவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் இங்கிலாந்திலும் நிறவெறிக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தலைநகர் லண்டன் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் லண்டனில் கருப்பின மக்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. அமைதியாக தொடங்கிய இந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீசாரை பயங்கரமாக தாக்கினர்.

அதனைத் தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இருதரப்பு மோதலில் போலீஸ் அதிகாரிகள் 6 பேர் உள்பட ஏராளமானோர் படுகாயமடைந்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வன்முறை சம்பவத்துக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன், உள்துறை மந்திரி பிரீத்தி பட்டேல் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

லண்டன் வீதிகளில் வன்முறை வெறியாட்டங்களுக்கு இடம் கிடையாது என்றும், அதையும் மீறி மீறி ஈடுபட்டால் காவல்துறையின் மூலம் ஒடுக்கப்படுவார்கள் என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com