கவுதமாலாவில் மற்றொரு எரிமலை சீற தொடங்கியது; சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது

கவுதமாலாவில் மற்றொரு எரிமலை சீற தொடங்கிய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டு உள்ளது.
கவுதமாலாவில் மற்றொரு எரிமலை சீற தொடங்கியது; சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது
Published on

கவுதமாலா சிட்டி,

கவுதமாலா நாட்டில் தலைநகர் கவுதமாலா சிட்டிக்கு அருகே பியூகோ எரிமலை அமைந்துள்ளது. கடந்த ஜூன் 3ந்தேதி இந்த எரிமலை திடீரென்று வெடித்து சிதறியது. இதில் இருந்து மிக வேகமுடன் வெளியேறிய லாவா 700 டிகிரி செல்சியசிற்கு கூடுதலான வெப்பத்தினை கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட கரும்புகை மற்றும் சாம்பலானது தலைநகர் உள்பட பிற பகுதிகளுக்கு பரவின.

இதில் பல கிராமங்கள் புதைந்தன. அங்குள்ள வீடுகள், மரங்கள் மற்றும் வாகனங்கள் ஆகியவை சாம்பலால் மூடப்பட்டன. இது மீட்பு பணியில் பாதிப்பினையும் ஏற்படுத்தியது.

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக பெரிய அளவில் இந்த எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. இதனால் 110 பேர் பலியாகி உள்ளனர். 200 பேர் வரை காணவில்லை.

இந்த நிலையில், கவுதமாலா தலைநகருக்கு 48 கி.மீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு எரிமலையான பகாயா சீற தொடங்கியுள்ளது.

கடந்த சில மாதங்களாக குறைந்த அளவில் இதன் லாவா வெளியேறி வந்தது. இந்த நிலையில், 11 ஆயிரத்து 483 அடிக்கு சாம்பல் மற்றும் வாயுக்கள் வெளியேற தொடங்கி உள்ளன. இந்த எரிமலை இன்னும் சில நாட்களில் தனது லாவா வெளியேற்றத்தினை அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது. இதனால் கவுதமாலா நகர அதிகாரிகள் அதிக எச்சரிக்கையுடன் உள்ளனர்.

இதனை தொடர்ந்து சர்வதேச விமான நிலையம் லா ஆரோரா மூடப்பட்டு உள்ளது. இதுபற்றி கவுதமாலா விமான போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், பயணிகள் மற்றும் விமானங்களின் பாதுகாப்பினை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com