காங்கோ நாட்டில் எரிமலை வெடிப்பு; குடியிருப்புகளை சூழ்ந்த நெருப்புக் குழம்பு

காங்கோ நாட்டில் உள்ள மவுண்ட் நயிராகாங்கோ எரிமலை நேற்று இரவு பெரும் சீற்றத்துடன் வெடித்துச் சிதறியது.
காங்கோ நாட்டில் எரிமலை வெடிப்பு; குடியிருப்புகளை சூழ்ந்த நெருப்புக் குழம்பு
Published on

நைரோபி,

காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஏரிக்கரை நகரமாகிய கோமா, சுமார் 20 லட்சம் மக்கள் தொகையை கொண்டது ஆகும். வர்த்தகம் மற்றும் போக்குவரத்தின் மையமாக விளங்கும் இந்த நகரை ஒட்டி அமைந்துள்ள மவுண்ட் நயிராகாங்கோ எனும் பெரிய எரிமலை கடந்த சில தினங்களாக சீற்றத்துடன் காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு இந்த எரிமலை வெடித்துச் சிதறியது. இதனால் எரிமலையில் இருந்து வெளிப்பட்ட நெருப்புக் குழம்பு, சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. எரிமலை வெடித்ததையடுத்து கோமா நகரில் இருந்து பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வெளியேறிய பகுதிகளில் நெருப்புக் குழம்பு சூழ்ந்ததால் ஏராளமான வீடுகள் சாம்பலாகி உள்ளன.

எரிமலையை ஒட்டிய பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1997 மற்றும் 2002-ல் இந்த எரிமலை வெடித்தது. 2002ல் எரிமலை வெடித்தபோது 250 பேர் உயிரிழந்தனர். ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர். உலகில் உள்ள ஆபத்தான எரிமலைகளில் இந்த மவுண்ட் நயிராகாங்கோ எரிமலையும் ஒன்று என்று புவியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com