ஆப்கானிஸ்தானில் வன்முறைக்கு மத்தியில் அதிபர் தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தலீபான் பயங்கரவாத அமைப்புடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆப்கானிஸ்தானில் வன்முறைக்கு மத்தியில் அதிபர் தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு
Published on

காபூல்,

பேச்சுவார்த்தைக்கு மத்தியிலும் அமெரிக்க படையினரை குறிவைத்து, தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்திய நிலையில், பேச்சுவார்த்தையை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முறித்துக்கொண்டார்.

ஆப்கானிஸ்தானில் 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இறுதியாக நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. 70 ஆயிரம் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த தேர்தலில், 13 பேர் போட்டியில் உள்ளனர். இருப்பினும் முக்கிய போட்டி தற்போதைய அதிபர் அஷரப் கனிக்கும், தலைமை நிர்வாகி அப்துல்லாவுக்கும்தான்.

இந்த தேர்தலை தலீபான் பயங்கரவாதிகள் சீர்குலைப்பார்கள் என்ற தகவல்களுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும் ஓட்டுப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் காந்தஹார் நகரில் ஒரு வாக்குச்சாவடியில் குண்டுவெடித்தது. இதில் 16 பேர் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டனர். பரவலாக பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்துள்ளதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

அதிபர் அஷரப் கனி, காபூலில் அமானி உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். ஓட்டு போட வந்திருந்த மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

அப்துல்லா, காபூலில் நாத்ரியா உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு செய்தார். அதிகாரிகள் தேர்தல் நடைமுறையில் தலையிடக்கூடாது, மக்கள் அனைவரும் ஓட்டு போட அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5 மணிக்கு முடிந்தது. 50 சதவீத ஓட்டுக்களை பெற்ற வேட்பாளர்தான் வெற்றி வேட்பாளர். எந்த வேட்பாளரும் 50 சதவீத ஓட்டுக்களை பெறாவிட்டால், முதல் 2 இடங்களை பிடித்த வேட்பாளர்கள் இடையே நவம்பரில் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com