

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் அரசியலில் ஓரணியில் எதிர்க்கட்சிகள் ஒன்றுதிரண்டுள்ளன. இம்ரான்கான் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கூட்டு முயற்சிக்கு, அதே இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் எம்.பி.க்களில் ஒரு தரப்பினரே ஆதரவுக்கரம் நீட்டுகின்றனர்.
ஆளும் கூட்டணியில் இருந்து முத்தாஹிதா குவாமி இயக்கம் பாகிஸ்தான் கட்சி விலகியதால், நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திப்பதற்கு முன்பாகவே அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டது.
எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி அடைந்து, இம்ரான்கான் அரசு வெற்றி பெற வேண்டுமானால் மொத்தம் உள்ள 342 எம்.பி.களில் 172 பேரது ஆதரவை பெற்றாக வேண்டும். ஆனால் இப்போது எதிர்க்கட்சிகள் தரப்பில் 172 எம்.பி.க்களும், அரசு தரப்பில் 164 எம்.பி.களும் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
ஏதேனும் அதிசயம் நடந்தால் மட்டும்தான் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி அடையும், மற்றபடி அரசுதான் தோல்வியை சந்திக்க வாய்ப்பு கணிசமாக உள்ளது. ஆனால் ஆட்டத்தை விட்டு விட மாட்டேன், கடைசி பந்து வரை ஆடுவேன் என்பதில் இந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் உறுதியாக இருக்கிறார்.
இதற்கிடையே இம்ரான்கானை கொல்ல முயற்சி என்ற பரபரப்பு குற்றச்சாட்டை அந்த நாட்டின் தகவல் துறை மந்திரி பவாத் சவுத்ரி வெளியிட்டுள்ளார். இந்த சதித்திட்டம் பற்றி நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் கூறி இருப்பதாக அவர் தெரிவித்து இருப்பது பரபரப்பின் உச்சம் ஆகும். இந்த நிலையில் இம்ரான்கான் அளித்த முக்கிய பேட்டியில் கூறியதாவது:-
எனக்கு முன் 3 வாய்ப்புகள் உள்ளது. அவை, ராஜினாமா செய்தல், நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்தித்தல், திடீர் தேர்தல் நடத்துதல் ஆகும். எங்களைப்பொறுத்தவரை தேர்தல்தான் சிறந்த வாய்ப்பு. பதவி விலகல் பற்றி நான் சிந்திக்கக்கூட இல்லை. நம்பிக்கை வாக்கெடுப்பை பொறுத்தமட்டில் கடைசிவரை போராடுவேன் என்று நம்புகிறேன்.
வாக்கெடுப்புக்கு முன்பாகவே எனது கட்சியில் பல எம்.பி.க்கள் எதிர்முகாமுக்கு போய் உள்ளார்களே என கேட்கிறீர்கள். இத்தகைய நபர்களை வைத்துக்கொண்டு நான் அரசை நடத்த முடியாது. நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெற்றாலும்கூட, முன்கூட்டியே தேர்தல் நடத்துவதுதான் சிறப்பான யோசனை.
இவ்வாறு அவர் கூறினார்.
பாகிஸ்தானில் எந்த பிரதமரும் 5 ஆண்டு காலம் முழுமையாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தது இல்லை. எனவே எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் தோற்று, இம்ரான்கான் முழு ஆட்சிக்காலம் பதவி வகித்தால் அது புதிய வரலாறு.
தவிரவும், நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் எந்தவொரு பிரதமரின் பதவியும் அங்கு பறிக்கப்பட்டதில்லை. எனவே எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மான ஓட்டெடுப்பு வெற்றி பெற்று, இம்ரான்கான் பதவி பறிக்கப்பட்டால் அதுவும் புதிய வரலாறுதான். இவ்விரண்டில் எது புதிய வரலாறு என்பது இன்றிரவு தெரியும்.