இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

இலங்கையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
Published on

கொழும்பு,

இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைமையில் அனுரா குமர திசநாயகா வெற்றிப் பெற்று அதிபரானார். அப்போது இருந்த நாடாளுமன்றத்தில் அனுரா குமர திசநாயகாவின் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு வெறும் 3 இடங்கள் மட்டுமே இருந்தன. பெரும்பான்மை இல்லாததால், நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து நவம்பர் 14-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என இலங்கை தேர்தல் கமிஷன் அறிவித்தது.

இதன்படி இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றது. 225 இடங்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு 196 உறுப்பினர்களை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்வார்கள். மீதமுள்ள 29 இடங்கள், கட்சிகள் தேசிய அளவில் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும். பெரும்பான்மைக்கு 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

இந்த தேர்தலில், அதிபர் அனுரா குமார திசநாயகே, சஜித் பிரேமதாசா, முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மஹிந்த ராஜபக்சே ஆகியோரின் கட்சிகள் களத்தில் உள்ளன. அதே போல் தமிழ் கட்சிகளும் போட்டியிடுகின்றன. இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டவுடன் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணி தொடங்கப்படும் எனவும், இன்று நள்ளிரவில் முதற்கட்ட முன்னிலை நிலவரம் தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் 79 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், அதை விட இன்று குறைவான அளவே வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி இன்று மதியம் 12 மணி வரை 50 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com