அமெரிக்க தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவது நோக்கமா? - ‘பேஸ்புக்’ உபயோகிப்பாளர்களின் தகவல்கள் திருட்டு

அமெரிக்க தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், 3 கோடி பேஸ்புக் உபயோகிப்பாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதா என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவது நோக்கமா? - ‘பேஸ்புக்’ உபயோகிப்பாளர்களின் தகவல்கள் திருட்டு
Published on

சான்பிரான்சிஸ்கோ,

இந்தியா உள்பட உலகம் முழுவதும் சுமார் 200 கோடிப்பேர் பேஸ்புக் சமூக வலைத்தளத்தை தீவிரமாக பயன்படுத்தி தகவல்களையும், படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.

சமீபத்தில் பேஸ்புக் உபயோகிப்பாளர்கள் 5 கோடிப்பேரின் கணக்குகளுக்குள் வியூ ஆஸ் என்னும் அம்சத்தின் மூலம் ஹேக்கர்கள் (சட்ட விரோதமாக இணையதளங்களில் புகுந்து திருடுகிறவர்கள், தாக்குதல் நடத்துகிறவர்கள்) புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கலாம் என தெரிய வந்தது.

ஏற்கனவே பேஸ்புக் உபயோகிப்பாளர்கள் 8 கோடியே 70 லட்சம் பேரின் தகவல்கள், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தால் திருடப்பட்டதாக தெரிய வந்து உலகமெங்கும் சர்ச்சை உண்டானது.

இந்த நிலையில், சமீபத்தில் 5 கோடிப்பேரின் பேஸ்புக் கணக்குகளுக்குள் ஹேக்கர்கள் புகுந்ததில், சுமார் 3 கோடிப்பேரின் அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டு உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி பேஸ்புக் நிறுவனத்தின் துணைத்தலைவர் கய் ரோசன் கூறுகையில், பேஸ்புக்கில் ஹேக்கர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியது தொடர்பாக அமெரிக்க மத்திய புலனாய்வு படையினர் (எப்.பி.ஐ.) விசாரணை நடத்துவதால், ஹேக்கர்கள் பற்றிய கூடுதல் விவரங்களை வெளியிடக்கூடாது என கூறி உள்ளனர். அதே நேரத்தில் சுமார் 1 கோடிப்பேரின் பெயர்கள், தொலைபேசி எண்கள், மின் அஞ்சல் முகவரிகள் ஆகியவற்றை அவர்கள் திருடி உள்ளனர். அதே நேரத்தில் அந்த ஹேக்கர்கள் யார் என்பதில் மர்மம் நீடிக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, சுமார் 1 கோடியே 40 லட்சம் பேரின் கணக்குகள் மீது கூடுதலான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

என்ன நோக்கத்திற்காக இதை ஹேக்கர்கள் செய்தார்கள் என்பது உறுதிசெய்யப்படாவிட்டாலும், அமெரிக்காவில் நவம்பர் 6-ந் தேதி நடக்க உள்ள தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக இது நடந்ததாக தெரிய வில்லை என்று அவர் கூறினார்.

எந்த மாதிரியான தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்படுகின்றன என்பது பற்றி வருகிற நாட்களில் உபயோகிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com