

தோஹா,
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த மாதம் 28-ந்தேதி தாக்குதல் நடத்த தொடங்கின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதனால் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் கப்பல் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு பகுதியான மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம், உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், வளைகுடா நாடுகள் எண்ணெய் உற்பத்தியை அடுத்த சில தினங்களில் நிறுத்தக் கூடும் எனவும் கத்தார் நாட்டின் எரிசக்தி துறை மந்திரி சாத் அல்-காபி எச்சரித்தார்.
இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை தற்போது அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 9% அதிகரித்து, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 93 அமெரிக்க டாலராக(இந்திய மதிப்பில் சுமார் ரூ.8,550) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2020 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை தற்போது அதிகபட்ச உச்சத்தை எட்டியுள்ளது. 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடியதால் இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.
இதனிடையே, இந்தியாவில் போதுமான அளவு கச்சா எண்ணெய் இருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், மத்திய கிழக்கில் போர் பதற்றம் தொடர்ந்து நீடித்து வந்தால் இந்தியாவில் உள்ள கச்சா எண்ணெய் இருப்பு குறைந்து பெட்ரோல், டீசல் விலை உயர வழிவகுக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
அதே சமயம், தேவை அதிகரிப்பை சமாளிக்க ரஷியாவிடம் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் வாங்க மத்திய அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு ஏற்கனவே தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.