போர் பதற்றம்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு


போர் பதற்றம்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு
x
தினத்தந்தி 8 May 2025 3:59 PM IST (Updated: 8 May 2025 4:04 PM IST)
t-max-icont-min-icon

அமெரிக்க துணைத் தூதரகம் அனைத்து தூதரக ஊழியர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமாபாத்,

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா மே 7-ந்தேதி(நேற்று) அதிரடி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் 4 இடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாதிகள் உள்ள அலுவலகங்கள், பயிற்சி முகாம்கள், அவர்களது வசிப்பிடங்கள் என 21 பயங்கரவாத நிலைகளை தரைமட்டமாக்கின.

இந்தியாவின் தாக்குதல் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இருநாடுகளும் மோதலை அதிகரிக்க கூடாது எனவும், இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

இதற்கிடையில் இந்தியாவில் உள்ள 15 நகரங்கள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டதாகவும், பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தானின் லாகூரில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"லாகூரில் உள்ள ஆளில்லா விமானங்கள் வெடித்ததாக வந்த செய்திகள், சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் வான்வெளியில் ஊடுருவக்கூடிய சாத்தியக்கூறுகள் பற்றிய தகவல்கள் காரணமாக, லாகூரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் அனைத்து துணைத் தூதரக ஊழியர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க உத்தரவிட்டுள்ளது.

மோதல்கள் நிறைந்த பகுதியில் இருக்கும் அமெரிக்க குடிமக்கள் பாதுகாப்பாக வெளியேற முடிந்தால் வெளியேற வேண்டும். வெளியேறுவது பாதுகாப்பானதாக இல்லாவிட்டால், அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க வேண்டும்.

பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்கள் எங்கள் செய்தி அமைப்பு மூலம் தகவல்கள் அனுப்பப்படும். ஸ்மார்ட் டிராவலர் சேர்க்கை திட்டத்தில் (STEP) நீங்கள் சேர்ந்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அமெரிக்க குடிமக்கள் பாதுகாப்பான தங்குமிடம் தேடிக்கொள்ள வேண்டும். அமெரிக்க அரசாங்க உதவியை நாடாத பிற வெளியேற்றத் திட்டங்களை கொண்டிருக்க வேண்டும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story