பயங்கரவாதத்திற்கு எதிராக ஸ்லோவேனியா எங்களுடன் நிற்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது - கனிமொழி எம்.பி பேட்டி

7 குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்து வருகின்றன.
பயங்கரவாதத்திற்கு எதிராக ஸ்லோவேனியா எங்களுடன் நிற்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது - கனிமொழி எம்.பி பேட்டி
Published on

லியூப்லியானா,

பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, இந்தியா, பாகிஸ்தான் இடையிலான மோதல் குறித்து சர்வதேச நாடுகளுக்குத் தெளிவாக விளக்குவதற்காக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் உள்ளடக்கிய 7 குழுக்கள் உருவாக்கப்பட்டன. அந்த குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்து வருகின்றன.

அதில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் ஒரு எம்.பி.க்கள் குழுவினர் ஸ்லோவேனியாவிற்கு சென்றுள்ளனர். நேற்று ஸ்லோவேனியா தலைநகர் லியூப்லியானாவுக்கு சென்ற கனிமொழி கருணாநிதி தலைமையிலான அனைத்து கட்சி எம்பிக்கள் குழு, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்டவை பற்றி ஸ்லோவேனியா நாட்டு அரசு பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தனர்.

மேலும், ஸ்லோவேனியா நாடாளுமன்ற வெளிநாட்டுக் கொள்கை குழுத் தலைவரான பிரெட்ராக் பாகோவிச் மற்றும் இந்தியாஸ்லோவேனியா பாராளுமன்ற நட்புறவு குழுவின் உறுப்பினர் மிரோஸ்லாவ் கிரெகோரிச் ஆகியோரை எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்து விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

அந்த சந்திப்பின்போது, பஹல்காம் தாக்குதல் குறித்தும், ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் இந்திய எம்.பி.க்கள் குழுவினர் விரிவாக விளக்கங்களை அளித்தனர். மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான மற்றும் சகிப்புத்தன்மை இல்லாத நிலைப்பாடு, போன்ற விஷயங்களை நாட்டின் ஒருமித்த கருத்தாகத் தெரிவித்தனர்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி,

ஸ்லோவேனியா நாடு மிகவும் வலுவான ஆதரவாளராக உள்ளனர். அவர்கள் எப்போதும் அமைதியை ஆதரித்து வருகின்றனர், மேலும் பயங்கரவாத செயல்களுக்கு எதிராக எப்போதும் நிற்கிறார்கள். உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிராக ஸ்லோவேனியா எங்களுடன் நிற்கும் என்ற நேர்மறையான உணர்வுடன் நாங்கள் திரும்பிச் செல்கிறோம். மேலும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) இந்தியா எதிர்பார்ப்புகளைப் பற்றிய விவாதங்கள் நடைபெறும் போது, அவர்கள் இந்தியாவுடன் நிற்பார்கள் என்பதிலும் நம்பிக்கை இருக்கிறது.

நாங்கள் மிகவும் தெளிவாகக் கூறியிருக்கிறோம். பொறுப்புணர்வு இல்லாமல், பேச்சுவார்த்தை மேசைக்கு சென்று இந்த முரண்பாட்டைத் தீர்க்க முடியாது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஒரு நாட்டுக்கும், இந்தச் செயல்களைச் செய்பவர்களுக்கும் இடையில் எங்களால் வேறுபடுத்திப் பார்க்க முடியாது.

இன்று, நாங்கள் சந்திக்கும் போது, இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதைக் குறைந்தபட்சம் அவர்கள் அறிவார்கள். ஆனால் ஒரு பிரதிநிதிகள் குழு வந்து அவர்களிடம் உண்மைகளை முன்வைக்கும்போது, நாம் என்ன அனுபவிக்கிறோம் என்பதைப் பற்றிய ஆழமான புரிந்துகொள்கிறார்கள் என்று பேசினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com