

தெஹ்ரான்
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது.
எனினும் ஈரான், அமெரிக்கா இடையே நிரந்தர போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தானில் 21 மணிநேரம் நீடித்த தொடக்க கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்கா தெரிவித்தது.
இதனை தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடுவதுடன், நீடித்த பொருளாதார நெருக்கடி நீடிக்கும் என அமெரிக்கா தெரிவித்தது.
ஈரான் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அப்படியில்லாமல் அதிருப்தி ஏற்படும் வகையிலான வழியை தேர்ந்தெடுக்கும் என்றால், அவர்களை முற்றுகையிடுவதுடன், உள்கட்டமைப்பு, மின்சாரம் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது குண்டுகள் வீசி தாக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிப்பும் வெளியிட்டார்.
ஈரானின் வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி வெளியிட்ட அறிக்கைக்கு விளக்கம் அளிக்கும் வகையில், வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகே ஹார்மூஸ் ஜலசந்தியில் ஈரான் முன்பே வரையறுத்துள்ள வழியின் மூலம் கப்பல் போக்குவரத்து நடைபெறும்.
ஈரானின் துறைமுகங்களை முடக்கும் நடவடிக்கை கடல்சார் பகுதியில் நீடிக்கும் என்றால், அதற்கு பதிலடி நடவடிக்கைகளை ஈரான் எடுக்கும் என எச்சரித்தும் உள்ளார். ஹார்மூஸ் ஜலசந்தியின் பாதுகாவலர் நாங்களே என்றும் தேவைப்படும் இடத்தில் மென்மையான போக்கை காட்டுவோம் என்றும் கூறினார்.
ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்து செல்லும் அனைத்து கப்பல்களும் தங்களுடைய அனுமதியை பெற வேண்டும் என்றும், நாடுகளின் கப்பல்கள் அங்கீகரிக்கப்பட்ட ஈரானிய வழிகளிலேயே செல்ல அனுமதிக்கப்படும். ராணுவ கப்பல்களுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.