

பிஜீங்
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மறைமுக வர்த்தக போர் நடந்து வருகிறது. கடந்த வாரம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 1300 பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் கூடுதலாக சுங்கவரி விதித்தது. அவற்றில் அலுமினியம், ஸ்டீல் போன்றவை முக்கிய பொருட்களாகும்.
அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி யாகும் சோயா பீன்ஸ், ஆரஞ்சு ஜூஸ், விமான உதிரிபாகங்கள் உள்பட 106 பொருட்களுக்கு சீனா கூடுதலாக சுங்கவரி விதித்தது. இதனால் இரு நாடு களின் வர்த்தக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப் படும் பொருட்களுக்கு மேலும் ரூ.7 லட்சம் கோடி கூடுதல் சுங்கவரி விதிக்க அதிபர் டிரம்ப் பரிசீலித்து வருகிறார். இது குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று அமெரிக்காவுடன் சாத்தியமான வர்த்தக போரில் எந்தஒரு விலையையும் கொடுக்க தயாராக இருப்பதாக சீனா கூறியுள்ளது. இது குறித்து சீனாவின் வர்த்தக அமைச்சக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அமெரிக்கா சீனா மற்றும் சர்வதேச சமூகத்தில் இருந்து வரும் எதிர்ப்பை அலட்சியப்படுத்துகிறது. ஒருதலைப்பட்ச செயல்பாட்டை வலியுறுத்துகிறது. அமெரிக்காவுடன் வர்த்தக யுத்தத்தில் எந்தவொரு விலையையும் கொடுக்க சீனா தயாராக உள்ளது. நாம் ஒரு வர்த்தக யுத்தத்தை விரும்பவில்லை, ஆனால் ஒரு போருக்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என கூறப்பட்டு உள்ளது.