

வாஷிங்டன் டி.சி.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக நேற்று முன்தினம் கடுமையாக தாக்குதல் நடத்தியதில், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர்.
இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதேபோன்று 40-க்கும் மேற்பட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டு விட்டனர் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் பாதுகாப்பு மந்திரி பீட் ஹெக்சேத் இன்று பேசும்போது, அமெரிக்காவுக்கு மரணம், இஸ்ரேலுக்கு மரணம் என கூறி வந்த ஈரான் ஆட்சிக்கு அமெரிக்காவிடம் இருந்து மரணம், இஸ்ரேலிடம் இருந்து மரணம் பரிசளிக்கப்பட்டு உள்ளது.
இது ஆட்சி மாற்றத்திற்கான போர் அல்ல. ஆனால், நிச்சயம் ஆட்சி மாற்றப்பட்டு உள்ளது. அதனால், உலகம் நன்மையடைந்து உள்ளது. போரை நாங்கள் தொடங்கவில்லை. ஜனாதிபதி டிரம்ப் அரசின் கீழ, நாங்கள் அதனை முடித்து வைத்து வருகிறோம். நீங்கள் அமெரிக்கர்களை கொன்றால், பூமியில் எந்த பகுதியில் உள்ள அமெரிக்கர்களையாவது அச்சுறுத்தினால், மன்னிப்போ தயக்கமோ இன்றி உங்களை நாங்கள் வேட்டையாடுவோம். உங்களை கொல்வோம் என்றார்.
எதிரியின் முகமூடி விலக்கப்பட்டு விட்டது. ஈரானின் ஏவுகணைகளும், டிரோன்களும் அண்டை நாடுகளின் ஓட்டல்கள், விமான நிலையங்கள், குடியிருப்புகள் மற்றும் பிற குடியிருப்புகள் மீது பாரபட்சமின்றி தாக்கியுள்ளன. கோழைத்தன பயங்கரவாத யுக்திகள் கொண்ட அரசாட்சி, பயங்கரவாத தந்திரங்கள் ஆகியவை இன்று மரணம் மற்றும் அழிவை கொண்டு வந்துள்ளன என பீட் கூறினார்.
ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வெளியுறவு மந்திரி ரூபியோ இருவரும் வளைந்து கொடுத்து சென்று, அமைதிக்கான வழியை ஏற்படுத்த தொடர்ந்து முயன்றனர். ஆனால், ஈரான் மறுத்து விட்டது. அணு ஆயுத நோக்கங்களை மீண்டும் ஆரம்பித்தனர். எங்களை பணய கைதிகளாக வைத்து கொண்டு அமெரிக்க படைகளை அச்சுறுத்தினர். அந்த விளையாட்டுகளை டிரம்ப் விளையாடமாட்டார் என பீட் ஹெக்சேத் கூறியுள்ளார்.