ஆப்கானிஸ்தானிலிருந்து திறமையானவர்களை வெளியேற்ற கூடாது: அமெரிக்காவுக்கு தலீபான் வேண்டுகோள்

ஆப்கானிஸ்தான் மக்கள் தங்களின் சொந்த நாட்டை விட்டு வெளியேறுவதை அமெரிக்கா ஊக்குவிக்க கூடாது என்று தலீபான்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து திறமையானவர்களை வெளியேற்ற கூடாது: அமெரிக்காவுக்கு தலீபான் வேண்டுகோள்
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானை மீண்டும் தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். புதிய அரசை அமைக்க தலீபான்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில், அந்த நாட்டு மக்கள் உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் அங்கிருந்து தப்பி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பதற்றமும் குழப்பமும் இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

இதன் விளைவாக ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா வெளியேற்றி வருகிறது. காபூல் விமான நிலையத்தில் இருந்து இந்த மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் மக்களும் அகதிகளாக சொந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த மீட்புப்பணிக்கான காபூல் விமான நிலையத்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தங்கள் படையினர் முழுவதையும் திரும்பபெற்றுவிடுவோம் என அமெரிக்கா தலீபான்களிடம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், ஒப்பந்ததின்படி ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என்றும், அவ்வாறு அமெரிக்கா தங்கள் படைகளை திரும்பபெறுவதில் தாமதம் ஏற்பட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலீபான் பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து திறமையானவர்களை வெளியேற்ற கூடாது என்று அமெரிக்காவுக்கு தலீபான் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தலீபான்களின் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், ஆப்கானிஸ்தான் மக்கள் தங்களின் சொந்த நாட்டை விட்டு வெளியேறுவதை அமெரிக்கா ஊக்குவிக்க கூடாது. பஞ்ச்ஷிர் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க உறுதி பூண்டுள்ளோம். ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்கா அனைத்து மக்களையும் வெளியேற்ற வேண்டும். இந்த தேதியை நீட்டிப்பது முடியாத காரியமாகும். இது அமெரிக்காவுடனான எங்கள் ஒப்பந்தத்திற்கு எதிரானதாக இருக்கும். இதன்பின்னர் நாங்கள் ஆப்கானிஸ்தானை விட்டு மக்கள் செல்ல அனுமதிக்க மாட்டோம். ஆப்கானிஸ்தானில் ஒரு புதிய ஆட்சி, அரசு மற்றும் மாநிலத்தை உருவாக்க நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com