

தெஹ்ரான்,
ஈரான்-அமெரிக்கா இடையே 2 வார கால தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திட்டம் அறிவித்தார். மேலும், ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடல் பகுதிகளை முற்றுகையிடப் போவதாகவும் தெரிவித்தார்.
அதன்படி, அமெரிக்க கடற்படை ஈரான் கடல் பகுதிகளை முற்றுகையிட்டுள்ளது. அமெரிக்காவின் 'ஆபிரகாம் லிங்கன்' விமானம் தாங்கி கப்பல், 11 அழிவு கப்பல்கள் மற்றும் 4 தாக்குதல் கப்பல்கள் மத்திய கிழக்கு கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனிடையே ஈரான்-அமெரிக்கா இடையே 2-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஈரான் பேச்சுவார்த்தையை விரும்புகிறது என்றும், போரை விரும்பவில்லை என்றும் ஈரான் அதிபர் பெஷெஸ்கியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஈரான் அரசு ஊடகத்திற்கு பெஷெஸ்கியன் அளித்துள்ள பேட்டியில், “எங்கள் நாடு போரை விரும்பவில்லை, மாறாக பேச்சுவார்த்தையை விரும்புகிறது. அமெரிக்கா தனது விருப்பத்தை திணிக்கவோ அல்லது ஈரானை சரணடைய வைக்கவோ மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் தோல்வியடையும்.
சர்வதேச சட்டம் மற்றும் மனிதாபிமான கொள்கை கட்டமைப்புகளின்படி பொதுமக்கள், குழந்தைகளைக் குறிவைப்பதிலும், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட முக்கிய மையங்களை அழிப்பதிலும் என்ன நியாயம் இருக்கிறது?" என்று பெஷெஷ்கியன் தெரிவித்துள்ளார்.