ஈரான் மீது வார இறுதியில் தாக்குதல்; டிரம்ப் உத்தரவால் பரபரப்பு

ஈரானை தங்களிடம் சரண் அடைய வைக்கும் நோக்கில் இந்த ராணுவ நடவடிக்கை இருக்கும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஈரான் மீது வார இறுதியில் தாக்குதல்; டிரம்ப் உத்தரவால் பரபரப்பு
Published on

வாஷிங்டன் டி.சி.

ஈரான் மீது வார இறுதியில் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் இணைந்து, அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாக ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியாக கடுமையாக தாக்கின. இதில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி முதலில் படுகொலை செய்யப்பட்டார். தொடர் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

போர் நிறுத்தம்

எனினும், இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. இதன் ஒரு பகுதியாக ஹார்மூஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்து உள்ளது. இந்த பகுதியை கடந்து செல்லும் கப்பல்களுக்கு வரி விதிப்பது என ஈரான் முடிவு செய்தது. இதனால், உலக நாடுகள் அதிர்ச்சியடைந்து உள்ளன.

கடந்த சில நாட்களாக ஈரான்-அமெரிக்கா போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் சற்று தணிந்துள்ளது.

வார இறுதியில் தாக்குதல்

இந்த சூழலில், ஈரான் மீது இந்த வார இறுதியில் தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால், மேற்காசிய பகுதிகளில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஈரானுக்கு எதிராக இந்த வார இறுதியில் தாக்குதல் நடத்தும்படி, தன்னுடைய ராணுவத்தினருக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உத்தரவு பிறப்பித்து உள்ளார் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

ஈரான் தாக்குதல்

ஈரானை தங்களிடம் சரண் அடைய வைக்கும் நோக்கில் இந்த ராணுவ நடவடிக்கை இருக்கும் என பெயர் வெளியிட விருப்பம் இல்லாத அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஈரானுடன் நடந்து வரும் ராஜதந்திர முயற்சிகளில் நிச்சயமற்ற தன்மை காணப்படுகிறது. அதனுடன், ஜோர்டான் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

இதற்கு கடுமையான ராணுவ பதிலடி இருக்கும் என டிரம்ப் எச்சரித்து இருந்த நிலையில், இந்த தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர, ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகளான மின்சார நிலையங்கள், பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்றவற்றின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது என மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com