ஒரு மனிதனின் வாழ்வை இனிமையாக்கும் விசயம் எது? ஆய்வில் சுவாரசிய தகவல்...

ஏழை, பணக்காரன் பாகுபாடின்றி ஒரு மனிதனின் வாழ்வை இனிமையாக்கும் விசயம் பற்றிய சுவாரசிய தகவல் ஆய்வில் வெளிவந்துள்ளது.
ஒரு மனிதனின் வாழ்வை இனிமையாக்கும் விசயம் எது? ஆய்வில் சுவாரசிய தகவல்...
Published on

வாஷிங்டன்,

உலகளவில் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளில் வசிக்கும் மக்களிடம் வாழ்வை அர்த்தமுள்ள ஒன்றாக ஆக்கியது பற்றி அறிவதற்காக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

இதுபற்றி கனடா, பெல்ஜியம், ஸ்பெயின், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 17 நாடுகளை சேர்ந்த மொத்தம் 19 ஆயிரம் பேரிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன.

இதில், ஒவ்வொரு நாட்டை சேர்ந்தவர்களும் தங்களுடைய விருப்பங்களை தெரிவித்து உள்ளனர். இவற்றில் குடும்பம், நண்பர்கள், பணி, பணம், கல்வி, ஆரோக்கியம், ஆன்மீகம், பொழுதுபோக்கு, ஓய்வு, நம்பிக்கை, மதம் மற்றும் வளர்ப்பு பிராணிகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டன. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை கூறியுள்ளனர்.

இதில், வாழ்வை இனிமையாக்கியது தங்களுடைய பணி என இத்தாலியர்களில் 43% பேரும், தென்கொரியாவில் 6% பேரும் தெரிவித்து உள்ளனர்.

வாழ்வை இனிமையாக்கியது குடும்பம், நண்பர்கள், சொத்து, தொழில் மற்றும் நம்பிக்கை என அமெரிக்காவில் வரிசைப்படுத்துகின்றனர். எனினும், ஆன்மீகம் மற்றும் நம்பிக்கை சார்ந்த விசயங்களை பிற நாடுகளை விட அமெரிக்கர்கள் அதிகம் கூறியுள்ளனர்.

அமெரிக்கர்களில் 15% பேர் மதம் என குறிப்பிட்டு உள்ளனர். இந்த வரிசையில நியூசிலாந்து (5%) 2வது இடத்தில் உள்ளது. எனினும், ஜப்பானியர்கள் வாழ்வை இனிமையாக்கியதற்கு மதம் அல்லது ஆன்மிகம் எதனையும் குறிப்பிடவில்லை.

ஆய்வில் கலந்து கொண்டவர்களில் பெரும் பகுதியினர் ஆரோக்கியம் பற்றியும் குறிப்பிட்டு உள்ளனர். சர்வதேச அளவில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்படுத்திய சூழலில் அவர்கள் ஆரோக்கியத்திற்கு தங்களுடைய நன்றியை வெளிப்படுத்தி உள்ளனர்.

இதேபோன்று, இளைஞர்கள் தங்களுடைய வாழ்வை இனிமையாக்கியதில் நண்பர்கள், கல்வி மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை கூறியுள்ளனர். வயது முதிர்ந்தோர்கள், ஓய்வு மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை குறிப்பிட்டு உள்ளனர்.

அமெரிக்காவில் பெருமளவிலானோர் தங்களுடைய வாழ்வை இனிமையாக்கியது குடும்பம் என தெரிவித்து உள்ளனர். இதனை தொடர்ந்து பணி மற்றும் சொத்து ஆகியவை அடுத்தடுத்த இடம் வகிக்கின்றன.

இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 17 நாடுகளில் 14 நாடுகளை சேர்ந்தவர்கள் தங்களுடைய வாழ்வை அர்த்தமுள்ள ஒன்றாக ஆக்கியது குடும்பம் என்றே தெரிவித்து உள்ளனர். ஆணோ அல்லது பெண்ணோ, அதிக கல்வி மற்றும் அதிகளவிலான வருவாய் கொண்டவர்களும் கூட குடும்பம் என்றே குறிப்பிட்டு உள்ளனர். அவற்றிலும் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் அதனை குறிப்பிட்டு கூறியுள்ளனர்.

இதனால், வாழ்வை அர்த்தமுள்ள ஒன்றாக ஆக்குவதில் பணமோ, பணியோ இன்னும் மற்ற பிற விசயங்களோ இவர்களுடைய விருப்பத்தில் இடம் பெறாமல் போய்விட்டது. பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளில் கூட குடும்பமே முக்கிய காரணியாக அவர்களால் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com