

வாஷிங்டன்,
தங்கள் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் ஏற்காததால், இஸ்ரேலுடன் சேர்ந்து கடந்த 28-ந்தேதி அந்த நாட்டை தாக்கியது. அமெரிக்கா. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஒரே நேரத்தில் இரு நாடுகளும் இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அவரது மகள், மருமகன், பேரன் உள் ளிட்டோரும் இந்த கொடூர தாக்குதலில் பலியாகினர்.
டெஹ்ரான் மட்டுமின்றி ஈரான் முழுவதும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் சரமாரியாக நடத்திய தாக்குதல்களில் பள்ளி மாணவிகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். தங்கள் உச்சபட்ச தலைவரை பறிகொடுத்ததால் ஆவேசத்துடன் வெகுண்டெழுந்த ஈரான், இஸ்ரேலை நோக்கி அலையலையாக ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசி வருகிறது.
மறுபுறம் அமீரகம், கத்தார், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்தும் நீண்டதூர ஏவுகணைகள், டிரோன்களை வீசி ஈரான் கலங்கடித்து வருகிறது. இதில் குவைத்தில் பணியமர்த்தப்பட்டு இருந்த 3 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் 5 பேர் பலத்த காயமடைந்தனர். இஸ்ரேலிலும் கணிசமான உயிரிழப்புகள் நிகழ்ந்தன.
உலகையே உலுக்கி வரும் இந்த போர் இன்று 4-வது நாளாக எந்தவித பின்னடைவும் இன்றி தொடர்ந்து வருகிறது. இருதரப்பும் நவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களுடன் தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்தநிலையில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
ஈரான் மீதான தாக்குதல் 4 வாரங்கள் நீடிக்கும். ராணுவ நடவடிக்கை திட்டமிட்டபடி தொடர்கிறது.ஈரான் பெரிய நாடு என்பதால் அதன் தற்காப்பு அரண்களை உடைக்க குறைந்தபட்சம் 4 வாரங்கள் ஆகும்.ஈரானின் உயர்நிலை தலைவர்கள் உட்பட 48 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கா எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றி. மோதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக உள்ளது. ஆனால் உரிய நேரத்தில் அவர்கள் பேசவில்லை. அமெரிக்காவின் எச்சரிக்கைகளை புறக்கணித்து அணுசக்தி திட்டத்தை கைவிட ஈரான் மறுத்துவிட்டது. ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல், நீண்ட தூர ஏவுகணைகளை அழிப்பதே முக்கிய நோக்கம் என்றார்.