

புதுடெல்லி,
இந்தியாவில் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், சிக்னல், அரட்டை, ஜியோ சேட், ஸ்னாப்சேட், சேர் சாட் உள்ளிட்ட பல சமூக வலைதளங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் அதிகம் பேர் பயன்படுத்தும் செயலி எதுவென்றால் கண்ணை மூடிக்கொண்டு வாட்ஸ் அப் என சொல்லிவிடலாம். வாட்ஸ் அப் என்பது அத்தியாவசிய தகவல் தொடர்பு செயலியாகவும் மாறிவிட்டது. வாட்ஸ் அப் செயலியை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்யும் போது சிம் கார்டு அவசியம். இதன்பிறகு சிம் கார்டை அகற்றினாலோ அல்லது சிம் கார்டு செயலிழந்துவிட்டாலோ கூட செயலிகள் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும்.
இதனால் சில முறைகேடுகளும் நடக்கின்றன. இதற்கு கடிவாளம் போட மத்திய அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக எடுத்தது. இதன்படி, மொபைல்போனில் ஆக்டிவ் சிம் கார்டு இருந்தால் மட்டுமே வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த முடியும். சிம் கார்டு இல்லையென்றால் சமூகவலைதள செயலிகள் தானாகவே செயலிழந்து விடும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை புதிய விதிகளை அறிவித்தது. இந்த விதிகளில் மாற்றம் செய்ய மத்திய அரசு மறுத்துவிட்ட நிலையில், சிம் அடிப்படையிலான சரிபார்ப்பை (SIM-based verification) செய்வதற்கான பணிகளை வாட்ஸ் அப் தொடங்கியுள்ளது. வாபீட்டாஇன்போ வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆண்ட்ராய்டு 2.26.8.6 பீட்டா வெர்ஷனில் இதற்கான சோதனை ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் விரைவில் ஆக்டிவ் சிம் கார்டு இல்லாவிட்டால் வாட்ஸ் அப் செயல்படாத நிலை ஏற்படும்.