டெஸ்லா ரோட்ஸ்டர் கார் எப்போது கிடைக்கும்? - எலான் மஸ்க் விளக்கம்

2028-ம் ஆண்டு உற்பத்தியைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெஸ்லா ரோட்ஸ்டர் கார் எப்போது கிடைக்கும்? - எலான் மஸ்க் விளக்கம்
Published on: 

டெஸ்லா ரோட்ஸ்டர் காரின் அறிமுகம் மற்றும் உற்பத்தி தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு கார் எப்போது கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

பறக்கும் கார் ரோட்ஸ்டர்

உலகின் நம்பர் 1 பணக்காரராக உள்ள எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் மின்சார கார்களைத் தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ரோட்ஸ்டர் கார் அறிமுக நிகழ்ச்சி, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் சோதனை மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ரோட்ஸ்டர் காரின் சாகசக் காட்சிகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன. பிரத்யேகமாக அமைக்கப்பட்ட வளைவான பாதையில் வேகமாகச் சென்ற கார், தலைகீழாகச் சென்று சிறிது நேரம் காற்றில் எழும்பி மீண்டும் தரையிறங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றன.

இந்தக் காரில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் திட்டம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நிகழ்ச்சியில் காட்டப்பட்ட சாகசத் திறன்கள் அனைத்தும் பொதுச் சாலைகளில் பயன்படுத்துவதற்கான அனுமதியைப் பெற்றுள்ளன என்று கூற முடியாது.

முன்பதிவு செய்தவர்களுக்கும் உறுதியில்லை!

டெஸ்லா ரோட்ஸ்டர் கார் கடந்த 2017-ம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் இதன் உற்பத்தி தொடர்ந்து தாமதமாகி வருகிறது. தற்போது 2028-ம் ஆண்டு உற்பத்தியைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, ரோட்ஸ்டர் காரை முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள் அதன் பயன்பாடு மற்றும் விநியோகம் குறித்து எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில், ரோட்ஸ்டர் கார் தற்போது உருவாக்கப் பணியில் இருப்பதாகவும், வாடிக்கையாளர்கள் அதை எங்கு ஓட்ட முடியும் என்பது இன்னும் உறுதியாகவில்லை என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி வழங்கப்படுமா?

ரோட்ஸ்டர் காரைச் சாலைகளில் பயன்படுத்த முடியுமா என்பது, வாடிக்கையாளர்கள் செல்லும் சாலையைப் பொறுத்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வாடிக்கையாளர்களுக்கு கார் எப்போது வழங்கப்படும் அல்லது அது திட்டமிட்டபடி வழங்கப்படுமா என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களிடையே எதிர்பார்ப்புடன் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. காரின் உற்பத்தி, பாதுகாப்பு அம்சங்கள், சாலைப் பயன்பாட்டுக்கான அனுமதி மற்றும் விநியோகத் தேதி ஆகியவை குறித்த தெளிவான அறிவிப்பை டெஸ்லா வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com