இந்தோனேசியாவுக்கு நான் வரும் போதெல்லாம்... பிபா உலகக்கோப்பையை ஒப்பிட்டு பேசிய பிரதமர் மோடி

அனைத்து நிகழ்ச்சிகளிலும் நீங்கள்தான் ஆட்ட நாயகனாக இருக்கிறீர்கள் என பேசியுள்ளார்.

இந்தோனேசியாவுக்கு நான் வரும் போதெல்லாம்... பிபா உலகக்கோப்பையை ஒப்பிட்டு பேசிய பிரதமர் மோடி
Published on

ஜகார்த்தா

இந்தோனேசியாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் இடையே பிரதமர் மோடி பேசும்போது, பிபா உலகக்கோப்பையை ஒப்பிட்டு பேசினார்.

பிரதமர் மோடி இந்தோனேசியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக அந்நாட்டுக்கு நேற்று சென்றடைந்த அவரை, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார். அவருடைய இந்தோனேசிய பயணத்தின்போது வர்த்தகம், பாதுகாப்பு, கனிம வளம் உள்பட 10க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

பிரதமர் மோடிக்கு இந்தோனேசியா நாட்டின் உயரிய, பிந்தாங் அதிபூர்ணா ஆப் தி ரிபப்ளிக் ஆப் இந்தோனேசியா என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் உரை

இந்தோனேசிய நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அவர் பேசும்போது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை இன்னும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். அவர், பகிரப்பட்ட வளத்திற்காக 140 கோடி இந்தியர்களும், 29 கோடி இந்தோனேசிய குடிமக்களும் ஒன்றாக இணைந்து முன்னேற்றத்திற்காக செயல்பட்டது பற்றிய வரலாற்றை உலகம் பார்க்கும் என்று கூறினார்.

அவர் தொடர்ந்து, ஒரு சுதந்திர, வெளிப்படையான மற்றும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக்கை நாங்கள் வலுவாக ஆதரிக்கிறோம். இந்தோ-பசிபிக்கில் சுதந்திர இயக்கம் என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. இந்தியாவானது விரிவாக்க கொள்கையில் அல்ல. வளர்ச்சிக்கான பாதையில் பயணிக்கிறது என்று அப்போது அவர் குறிப்பிட்டார்.

கால்பந்து காய்ச்சல்

அவர், இந்திய வம்சாவளியினர் இடையே பேசும்போது, கால்பந்து காய்ச்சல் உலகம் முழுவதும் பற்றிப்பிடித்து கொண்டுள்ளது. இந்தோனேசியாவிலும் கால்பந்துக்கான தீவிர ஆர்வம் அதிகரித்து காணப்படுகிறது. அதில் ஒரு விசயம் ஒத்துப்போகிறது.

நான் எப்போதெல்லாம் இந்தோனேசியாவுக்கு வருகை தருகிறேனோ, அப்போதெல்லாம், பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரின் ஆர்வமும் பரவி கொண்டிருக்கிறது.

ஆட்ட நாயகன்

முதல் நிகழ்ச்சி 2018-ம் ஆண்டு நடந்தது. 2022-ம் ஆண்டு பாலியில் நாம் சந்தித்து கொண்டோம். 2026-ம் ஆண்டு ஜகார்த்தாவில் நாம் மீண்டும் உரையாடி கொண்டிருக்கிறோம். இந்த மூன்று தருணங்களிலும், இந்தோனேசியா முழுவதும் கால்பந்துக்கான பரபரப்புக்கான சத்தம் நிறைந்து காணப்படுகிறது. இந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் நீங்கள்தான் ஆட்ட நாயகனாக இருக்கிறீர்கள் என பேசியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com