ஹைதி அதிபர் படுகொலைக்கு வெள்ளை மாளிகை கண்டனம்

ஹைதி நாட்டு அதிபர் ஜோவெனல் மாய்சே சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அமெரிக்க அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஹைதி அதிபர் படுகொலைக்கு வெள்ளை மாளிகை கண்டனம்
Published on

வாஷிங்டன்,

கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றான ஹைதியின் அதிபர் ஜோவெனல் மாய்சே இன்று போர்ட்டொ பிரின்ஸ் நகரில் உள்ள அவரது தனியார் குடியிருப்பு வளாகத்திற்குள் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவரது மனைவி மார்ட்டின் மாய்சே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தகவலை ஹைதி நாட்டின் இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் உறுதிப்படுத்தியுள்ளார். இதை, மனித தன்மையற்ற காட்டுமிராண்டித்தனமான செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அரசாங்கத்தை தொடர்ந்து வழிநடத்தவும் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஹைதி அதிபர் படுகொலைக்கு அமெரிக்க அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு செயலாளர் ஜென் சாகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இது மிகவும் துக்கமான நிகழ்வு என்றும் அதே சமயம் மிக கொடூரமான குற்றம் என்றும் கூறியுள்ளார்.

ஹைதி நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு சார்பில் இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும், ஹைதி அரசுக்கு தேவையான எந்த விதமான உதவியையும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாகவும் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com