

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஹிலாரியை தோற்கடிப்பதற்காக டிரம்ப் பிரச்சாரக் குழுவும் ரஷ்யாவும் இணைந்து செயல்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.
ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற டிரம்பும் புதினும் கடந்த 7ம் தேதி சுமார் 2 மணி நேரம் தனியாக சந்தித்துப் பேசியதாக ஏற்கெனவே தகவல் வெளியானது.
இந்நிலையில், அதே நாளில் இரவு விருந்தின்போது இருவரும் 2-வது முறையாக, சுமார் 1 மணி நேரம் சந்தித்துப் பேசியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
விருந்தின் போது தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்ற டிரம்ப், புதினின் இருக்கைக்கு அருகில் உட்கார்ந்து அவருடன் பேசியுள்ளார். அதே நேரம் புதினின் மொழி பெயர்ப்பாளர் மட்டும் அங்கு இருந்துள்ளார் என அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், டிரம்பும் புதினும் 2-வது முறையாக சந்தித்துப் பேசவில்லை.
இரவு விருந்து முடியும் போது இருவரும் சுருக்கமாக பேசினர். இந்தச் சந்திப்பை மறைத்துவிட்டதாகக் கூறுவது தவறு என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு தலைவர்களின் ரகசிய சந்திப்பு அதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. எனினும், இது போலியான செய்தி என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.