பைசர் தடுப்பு மருந்து அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி

கொரோனா வைரசுக்கு எதிரான பைசர் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்ள உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்து உள்ளது.
பைசர் தடுப்பு மருந்து அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி
Published on

ஸ்டாக்ஹோம்,

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன்பின்னர் உலக நாடுகளுக்கு பாதிப்புகள் பரவின. இவற்றில் அமெரிக்கா அதிக அளவில் பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

கொரோனா பாதிப்பு பெருந்தொற்று என கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு வெளியிட்டது. பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரசால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள சூழலில் அதற்கான தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணியும் நடந்தன.

இவற்றின் ஒரு பகுதியாக, பைசர், பாரத் பையோடெக் உள்ளிட்ட நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணியில் பலகட்ட பரிசோதனைகளில் வெற்றி பெற்றுள்ளோம் என கூறியுள்ளன.

இதனை தொடர்ந்து அவற்றை தன்னார்வலர்களுக்கு பரிசோதனை செய்யும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. இதில் வெற்றி பெறும் நிலையில், டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு முதற்கட்ட தடுப்பு மருந்துகளை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு உள்ள செய்தியொன்றில், பைசர் மற்றும் பையோ என்டெக் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவித்து உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இந்த முடிவால், பைசர் மற்றும் பையோஎன்டெக் தடுப்பு மருந்துகள் முதன்முறையாக அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை பெற்றுள்ளன.

இதனால் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளும் உடனடியாக இவற்றுக்கு ஒப்புதல் வழங்கி தடுப்பு மருந்துகளை தேவையான அளவுக்கு இறக்குமதி செய்து கொள்ள முடியும். நாட்டில் தேவையான பகுதிகளுக்கு அவற்றை வினியோகித்து கொள்ளவும் முடியும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com