வெளியேறும் முடிவை மறுபரிசீலனை செய்யுமா அமெரிக்கா..? உலக சுகாதார அமைப்பு முக்கிய வேண்டுகோள்


வெளியேறும் முடிவை மறுபரிசீலனை செய்யுமா அமெரிக்கா..? உலக சுகாதார அமைப்பு முக்கிய வேண்டுகோள்
x
தினத்தந்தி 3 Feb 2025 2:28 PM IST (Updated: 3 Feb 2025 2:29 PM IST)
t-max-icont-min-icon

உலக சுகாதார அமைப்பு இன்னும் சில தரவுகளை அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு வழங்கி வருகிறது.

ஜெனிவா:

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக கடந்த மாதம் 20-ம் தேதி பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என்ற அறிவிப்பும் ஒன்று. கொரோனா தொற்று பரவிய காலத்தில், உலக சுகாதார அமைப்பு சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்புடன் பணியாற்றுவதை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் அதிகாரிகளுக்கு சமீபத்தில் அறிவுறுத்தப்பட்டது.

உலக சுகாதார அமைப்புக்கு அதிக நிதி வழங்கும் அமெரிக்கா வெளியேறுவதால் உலகளாவிய சுகாதார நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படும். எனவே, அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. இதில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். அமெரிக்க பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை.

இக்கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் பேசியதாவது:-

உலக சுகாதார அமைப்பானது இன்னும் சில தரவுகளை அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு வழங்கி வருகிறது. அவர்களுக்கு தகவல் தேவைப்படுவதால் நாம் தொடர்ந்து அவர்களுக்கு தகவல்களை தந்துகொண்டிருக்கிறோம். நீங்கள் (மற்ற நாடுகளின் பிரதிநிதிகள்) அமெரிக்காவை தொடர்புகொண்டு, வெளியேறும் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அழுத்தம் கொடுக்கவேண்டும்.

அமெரிக்கா வெளியேறுவது வெறும் நிதியைப் பற்றியது மட்டுமல்ல. எதிர்காலத்தில் அமெரிக்கா எதிர்கொள்ளவிருக்கும் தொற்றுநோய் குறித்த விவரங்கள் மற்றும் பிற முக்கியமான சுகாதார பிரச்சினைகளில் உள்ள வெற்றிடத்தை பற்றியது. நோய் தொற்றுகள் குறித்த முக்கியமான தகவல்களை அமெரிக்கா தவறவிடவேண்டியிருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story