

ஜெனீவா,
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால், 2022ம் ஆண்டுக்குள் கொரோனாவுக்கு முடிவு கட்டிவிடலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு பிறந்ததை ஒட்டி உலக சுகாதார அமைப்பின் சார்பில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
சில நாடுகளின் குறுகிய தேசியவாத கொள்கை மற்றும் தடுப்பூசி பதுக்கல் காரணமாக ஒமைக்ரான் போன்ற வைரஸ் மாறுபாடுகள் அடைவதற்கு தகுந்த சூழல் ஏற்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள், உலகம் முழுவதும் ஒரே சீராக விநியோகிக்கப் படாமல் இருப்பதால் புதிய வைரசுகள் தோன்ற காரணமாக உள்ளன.
தடுப்பூசியை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதில் சமத்துவமின்மை தொடர்ந்தால், வைரஸ் புதுப்புது உருமாற்றங்கள் அடைந்து பரவுவதை தடுக்க முடியாது.
தடுப்பூசி சமத்துவத்தை கடைபிடிக்கும் வரை, தொற்றுநோய்க்கு முடிவு கட்ட முடியாது. தடுப்பூசி சமத்துவத்தை கடைபிடித்தால், தொற்றுநோய்க்கு முடிவு கட்டலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.