புதிய போப் யார்? தேர்வு பணிகள் 7-ந் தேதி தொடக்கம்

போப் பிரான்சிஸ் உடல் அடக்கத்தை தொடர்ந்து வாடிகனில் தற்போது துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
Image Courtesy : PTI
Image Courtesy : PTI
Published on

வாடிகன் சிட்டி,

கத்தோலிக்க திருச்சபை தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் (வயது 88) உடல் நலக்குறைவால் கடந்த 21-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் 26-ந் தேதி ரோமில் அடக்கம் செய்யப்பட்டது. போப் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய போப் யார்? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்துள்ளது. இதற்கு விடை காணும் முயற்சியில் வாடிகன் இறங்கி இருக்கிறது.

அதன்படி கார்டினல் எனப்படும் கர்தினால்கள் நேற்று கூடி இது குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான கர்தினால்களின் கான்கிளேவை (மாநாடு) அடுத்த மாதம் (மே) 7-ந் தேதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

உலகம் முழுவதும் 252 கர்தினால்கள் உள்ள நிலையில், போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான வாக்களிக்கும் தகுதி படைத்த 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 135 பேர் ஆவர். அவர்கள் தங்களுக்குள்ளே இருந்து ஒருவரை புதிய போப் ஆக தேர்வு செய்வார்கள்.

இதற்காக வாடிகன் சிஸ்டைன் சிற்றாலயத்தில் 7-ந் தேதி கூடி தங்களுக்குள்ளே இருந்து ஒருவரை புதிய போப் ஆண்டவராக தேர்வு செய்கிறார்கள். இது ஓரிரு நாளிலோ அல்லது வாரக்கணக்கிலோ நீளும் என்பது குறிப்பிடத்தக்கது. போப் பிரான்சிஸ் உடல் அடக்கத்தை தொடர்ந்து வாடிகனில் தற்போது துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இநத 9 நாள் துக்கம் 4-ந் தேதியுடன் நிறைவடையும் நிலையில் 5-ந் தேதியில் இருந்து இந்த மாநாட்டை நடத்த முடியும்.

ஆனால் சிறந்த ஒரு கார்டினலை புதிய போப்பாக தேர்வு செய்யும் வகையில், கார்டினல்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக 2 நாள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு, 7-ந் தேதி கான்கிளேவ் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com