

டெல் அவிவ்,
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில் நீண்டகாலமாகப் பிரதமராகப் பதவி வகித்து வரும் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட் சிக்கு, அங்கு நடந்து முடிந்துள்ள பொதுத்தேர்தல் முடிவுகள் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடித்த நிலையில், நாட்டின் அடுத்த பிரதமரைத் தீர்மானிக்கும் உச்சக்கட்டப் பரபரப்பு நிலவி வருகிறது.
கடந்த மாதம் 27-ந்தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், ஆட்சியமைக்க தேவையான 61 இடங்களை எந்தக் கூட்டணியும் பெறவில்லை. தற்போதைய பிரதமர் நெதன்யாகுவின் கூட்டணி 53 இடங்களையும், முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்கோட்டின் எதிர்க்கட்சி கூட்டணி 48 இடங்களையும் மட்டுமே கைப்பற்றி திணறி வந்தன.
இந்நிலையில், தேர்தலில் 19 இடங்களை வென்று 'கிங்மேக்க ராக' மாறிய அரபு கட்சிகளான 'ராம்' மற்றும் 'ஜாயிண்ட் லிஸ்ட் ஆகியவை, எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட்டிற்கு அதிரடியாகத் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன. இதன் மூலம் 67 உறுப்பினர்களின் பலத்துடன் ஐசன்கோட் ஆட்சிய மைப்பதற்கான சூழல் பிரகாசமாகியுள்ளது.
நெதன்யாகுவின் நீண்டகால கூட்டணிக் கட்சியான 'யுனைடெட் தோரா ஜூடாயிஸம்' அவருக்கு ஆதரவளிக்க மறுத்ததால் நெதன்யாகுவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நெதன்யாகு, அரபு கட்சிகள் வெளிநாட்டுப் பணத்தை வைத்து வாக்குகளை விலைக்கு வாங்கி மோசடி செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், தேர்தல் குழு இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இஸ்ரேலின் புதிய அரசை அமைக்கப் போவது யார் என்பது குறித்த தனது இறுதி முடிவை அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முறைப்படி அறிவிக்க உள்ளார். இதனால் உச்சக்கட்டப் பரபரப்பு நிலவி வருகிறது.