ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது ஏன்? - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விளக்கம்

சுதந்திரமான, அமைதியை விரும்பும் ஈரானை உருவாக்கும் நேரம் வந்துவிட்டது என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது ஏன்? - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விளக்கம்
Published on

ஜெருசலேம்,

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவம் இணைந்து இன்று திடீர் தாக்குதல் நடத்தின. ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை தொடங்கியுள்ளோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது சுமார் 30 ஏவுகணைகளை செலுத்திய ஈரான், தொடர்ந்து பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளம் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது ஏன்? என்பது குறித்து நாட்டு மக்களிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது;-

“ஈரானின் பயங்கரவாத ஆட்சியால் நமது இருப்புக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை அகற்ற இஸ்ரேலும், அமெரிக்காவும் ராணுவ நடவடிக்கையில் இறங்கியுள்ளன. நமது சிறந்த நண்பர் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரலாற்றுத் தலைமைக்கு நான் நன்றி கூறுகிறேன்.

47 ஆண்டுகளாக, ஈரானின் அயத்துல்லா ஆட்சி 'இஸ்ரேலுக்கு மரணம்' மற்றும் 'அமெரிக்காவுக்கு மரணம்' என்று அரைகூவல் விடுத்து வந்துள்ளது. அது நமது ரத்தத்தை சிந்த வைத்தது, பல அமெரிக்கர்களை கொன்றது. மேலும் ஈரான் அரசு தனது சொந்த மக்களையே படுகொலை செய்தது.

இந்த கொலைகார பயங்கரவாத ஆட்சி, மொத்த மனிதகுலத்தையும் அச்சுறுத்தும் அணு ஆயுதங்களை கொண்டிருக்க நாம் அனுமதிக்கக்கூடாது. அணு ஆயுதம் தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஈரானுடன் அமெரிக்கா 2 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஆனால் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் இஸ்ரேல், அமெரிக்காவின் கூட்டு ராணுவ நடவடிக்கை மூலம் ஈரானிய மக்கள் இனி தங்கள் வாழ்வை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதற்கான நிலை உருவாகும். இந்த போர் ஈரானிய மக்களுக்கு எதிராக அல்ல, ஆட்சிக்கு எதிரானது.

ஈரானில் உள்ள பெர்சியர்கள், குர்துகள், அஜர்பைஜானியர்கள், பலூச்சிகள் மற்றும் அஹ்வாசிகள் உள்ளிட்ட அனைத்து பிரிவு மக்களும் கொடுங்கோன்மையின் பிடியில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு, சுதந்திரமான மற்றும் அமைதியை விரும்பும் ஈரானை உருவாக்கும் நேரம் வந்துவிட்டது.

இந்த நேரத்தில் இஸ்ரேல் குடிமக்கள் அரசின் உத்தரவுகளுக்கு இணங்க வேண்டும். ஆபரேஷன் ‘ரோரிங் லயன்’(கர்ஜிக்கும் சிங்கம்) நடவடிக்கையை தொடர்ந்து நடத்துவதற்கு, நம்மிடம் பொறுமையும், தைரியமும் தேவை. நாம் ஒன்றாக நிற்போம், ஒன்றாக போராடுவோம், இஸ்ரேலின் நித்தியத்தை ஒன்றாக உறுதி செய்வோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com