ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா திடீர் தாக்குதல்; காரணம் என்ன?

ஈரானுக்கும் , இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா திடீர் தாக்குதல்; காரணம் என்ன?
Published on

தெஹ்ரான்,

ஈரானுக்கும் , இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல், அமெரிக்காவை ஈரான் எதிரியாக கருதிகிறது. இஸ்ரேலும், அமெரிக்காவும் அழிக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்தை ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது. மேலும், இஸ்ரேலுக்கு அண்டை நாடான லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவுக்கும், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும் ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

இந்த ஆயுதக்குழுக்கள் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேவேளை, இந்த ஆயுதக்குழுக்கள் மீது இஸ்ரேலும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

அதேவேளை, ஈரான் அணுசக்தி மையங்கள், அணு ஆராய்ச்சி நிலையங்கள் என பல்வேறு அணுசக்தி தொடர்பான கட்டமைப்புகள் உள்ளன.

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா ஹமேனி தலைமையிலான அரசு அணு ஆயுதங்களை தயாரிக்க பயன்படும் யுரேனியத்தை செறிவூட்டியுள்ளது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தால் அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும். ஆனால், அணு சக்தியை மின்சாரம் போன்ற ஆக்கப்பூர்வமான, மக்கள் நலம் சார்ந்த திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் அணு ஆயுதம் தயாரிக்கமாட்டோம் என்றும் ஈரான் கூறிவருகிறது.

ஒருவேளை, ஈரான் அணு ஆயுதத்தை தயாரித்துவிட்டால் அது தங்கள் நாட்டின் மீது பயன்படுத்தும் என்று இஸ்ரேல் நினைக்கிறது. மேலும், ஈரான் அணு ஆயுதத்தை தயாரித்தால் தனது நட்பு நாடான இஸ்ரேல் மட்டுமின்றி தங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அமெரிக்கா கருதுகிறது. இதனால், ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்கா முயற்சித்தது.

இது தொடர்பாக ஈரான் - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக ஈரான் தரப்பு தெரிவித்த நிலையில் பேச்சுவார்த்தையில் முன்னேற்றமில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் தெரிவித்தார். பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்த நிலையில் மறுபுறம் அரபிக்கடல் பகுதியில் அமெரிக்கா போர்கப்பல்கள், விமானம்தாங்கி போர்கப்பல்கள் என படைகளை குவித்தது.

இந்நிலையில், ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து இன்று திடீர் தாக்குதல் நடத்தியது. ஈரான் அணு ஆயுதத்தை பெறுவதை தடுக்கவும், ஈரானின் ஏவுகணை தயாரிப்பை தடுக்கவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தங்கள் நாட்டின் இருப்புக்கு ஆபத்து ஏற்படும் அதில் இருந்து தற்காத்துக்கொள்ள ஈரான் மீது முன்கூட்டியே தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரான், இஸ்பாகான், குவாம், கர்மன்ஷா, கராஜ் ஆகிய 5 நகரங்களை குறிவைத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் அணு சக்தி மையங்கள், ராணுவ தளங்கள், உளவுத்துறை, பாதுகாப்பு கட்டமைப்புகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளை, தாக்குதலில் இருந்து ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி, ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் தப்பியுள்ளதாகவும், இருவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள், டிரோன்கள் ஏவப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகள், டிரோன்களை இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்பு தடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ஆதரவு நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்க படைத்தளங்கள் மீதும் தாக்குதலை தொடங்கியுள்ளது.

அதன்படி, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான் போன்ற நாடுகள் மீது ஈரான் டிரோன், ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நாடுகளில் அமெரிக்க படைத்தளங்கள் உள்பட அமெரிக்க ராணுவ கட்டமைப்புகள் உள்ளன.

அதேவேளை, ஈரானில் ஆட்சி மாற்றமே இலக்கு என கூறியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அந்நாட்டின் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெறும் என்று கூறியுள்ளது.

இதன் மூலம் ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com