கொரோனா இறப்பு விகிதத்தில் நாடகமாடுகிறதா வடகொரியா ? - நிபுணர்களின் பார்வை என்ன ?

கொரோனா வைரஸ்-க்கு எதிரான இறப்பு விகிதம் வடகொரியாவில் மிகவும் குறைவாக இருப்பது நிபுணர்களுக்கு பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
Image Courtesy : AFP 
Image Courtesy : AFP 
Published on

சியோல்,

வடகொரியாவில் கொரோனா தொற்று நுழைந்திருப்பதை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் கடந்த 12-ந்தேதி உறுதிப்படுத்தினார். அதே கையோடு ஊரடங்கு பொதுமுடக்கத்தையும் அறிவித்தார். தொற்று கண்டறியப்பட்ட முதல் சில தினங்களில் கொரோனா அறிகுறி 4 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த சில தினங்களாக அந்த எண்ணிக்கை 1.50 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது.

அதே நிலையில் இது வரை உலகம் எங்கும் இல்லாத வகையில் கொரோனா வைரஸ்-க்கு எதிரான இறப்பு விகிதம் வடகொரியாவில் மிகவும் குறைவாக இருப்பது நிபுணர்களுக்கு பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. வடகொரியாவில் இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பிறகு சுமார் 33 லட்சம் மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் 69 பேர் மட்டுமே இறந்துள்ளனர்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையோடு இறப்பு விகிதத்தை ஒப்பிட்டால் அதுவெறும் 0.002 சதவிதமே ஆகும். உலகின் பணக்கார மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளில் கூட கொரோனா தொற்று நுழைந்த போது இறப்பு விகிதம் இந்த அளவிற்கு குறைவாக இருந்தது இல்லை.

தென் கொரியாவில் தடுப்பூசி போடப்படாதவர்களின் இறப்பு விகிதம் மட்டுமே 0.6% ஆக இருக்கும் போது வடகொரியாவின் இறப்பு விகிதம் 0.002 சதவிதமாக இருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இது உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள் என பலருக்கு ஆச்சரியமாக உள்ளது மட்டுமின்றி பல சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

அதுமட்டுமின்றி வளர்ந்த நாடுகளை விட அங்குள்ள மிகக் குறைவான தடுப்பூசிகள், கணிசமான எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள நபர்கள், தீவிர சிகிச்சை வசதிகள் இல்லாதது மற்றும் அதிக எண்ணிக்கையிலான வைரஸ் நோயாளிகளைக் கண்டறிய சோதனைக் கருவிகள் இல்லாததால் மற்ற நாடுகளை விட வடகொரியாவில் அதிக இறப்புகள் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

வட கொரியாவின் எப்போதும் நிலவும் ரகசியத்தன்மை என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் தான் இப்போதும் அங்கு ஏற்பட்டுள்ள கொரோனா உயிரிழப்புகள் குறித்த முழு விவரங்களை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் அறிவியல் ரீதியாக வடகொரியாவின் புள்ளிவிவரங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com