ஜப்பானில் காட்டுத்தீ: ஒருவர் பலி; 2 ஆயிரம் பேர் தப்பியோட்டம்

ஜப்பானில் மிக பெரிய அளவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளார்.
டோக்கியோ,
ஜப்பானின் வடக்கே ஒபுனேட்டோ நகரில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இது அடுத்தடுத்து பரவி பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியது. இதனால், பயந்து போன குடியிருப்புவாசிகள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.
இதுவரை 2 ஆயிரம் பேர் தப்பி வேறிடத்திற்கு சென்றனர். 1,200 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். காட்டுத்தீயில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளார். 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக பெரிய அளவில் இந்த காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது என பேரிடர் மேலாண் கழகத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்த காட்டுத்தீ 1,800 ஹெக்டேர் பரப்பளவுக்கு பரவி இருக்க கூடும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவரின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 80-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன.
நாடு முழுவதிலும் இருந்து 1,700 தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, ராணுவ ஹெலிகாப்டர்களும் கொண்டு வரப்பட்டு உள்ளன.






