

வாஷிங்டன்,
பி.பி.சி. டெலிவிஷனுக்கு ஏஞ்சலினா ஜோலி சிறப்பு பேட்டி அளித்தார்.
அந்தப் பேட்டியின்போது அவர் தனக்கு அரசியலில் குதிக்கும் ஆர்வம் இருப்பதை வெளிப்படுத்தினார். இது தொடர்பாக பி.பி.சி. எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஏஞ்சலினா ஜோலி, 20 வருடங்களுக்கு முன்பாக நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் நான் சிரித்துதான் இருப்பேன். நான் எங்கு தேவைப்படுகிறோனோ, அங்கு செல்வேன் என்பதை எப்போதும் கூறுவேன். அதே நேரத்தில் நான் அரசியலுக்கு ஏற்ற நபரா என்பது எனக்கு தெரியாது. உண்மையிலேயே மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற தோன்றுகிற ஒன்றை நான் நேர்மையுடன் செய்வேன் என பதில் அளித்தார்.
தொடர்ந்து அவர் கூறும்போது, இப்போதைக்கு ஐ.நா. முகமைக்காக, மக்களுக்காக நேரடியாக பணியாற்ற என்னால் முடிகிறது. நான் அரசுகளுடனும் இணைந்து பணியாற்ற முடியும். நான் ராணுவத்துடனும் இணைந்து செயல்பட முடியும் என குறிப்பிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான ஜனநாயக கட்சி வேட்பாளர் பட்டியலில் இடம் பெறும் வாய்ப்பு குறித்து பி.பி.சி. கேள்வி எழுப்பியபோது அவர் அதை மறுக்கவில்லை. நன்றி என்று மட்டும் பதில் கூறி முடித்துக்கொண்டார்.
ஏஞ்சலினா ஜோலி, ஜோனி லீ மில்லர், பில்லி பாப் தாண்டன் ஆகியோரை திருமணம் செய்து விவாகரத்து செய்து விட்டார். 3வது கணவரான நடிகர் பிராட் பிட்டையும் 2016ல் இவர் பிரிந்து விட்டு, குழந்தைகளை யார் வளர்ப்பது என்பது தொடர்பான சட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.