போர் முடிவுக்கு வருமா? அமெரிக்கா முன்மொழிவை பரிசீலிக்கும் ஈரான்

அமெரிக்காவின் முன்மொழிவு குறித்து ஈரான் இன்று தனது கருத்தை தெரிவிக்க உள்ளது.
போர் முடிவுக்கு வருமா? அமெரிக்கா முன்மொழிவை   பரிசீலிக்கும் ஈரான்
Published on

தெக்ரான்,

அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், மோதலை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதில் இழுபறி நீடிக்கிறது.அணுசக்தி திட்டங்கள், ஹோர்முஸ் ஜலசந்தி உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகள் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. சமீபத்தில் ஈரான் அளித்த 14 அம்ச முன்மொழிவை அமெரிக்கா நிராகரித்தது. இதற்கிடையே, போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா புதிய முன்மொழிவுகளை ஈரானிடம் அளித்துள்ளது. மேலும், ஈரானுடனான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஈரானுடன் ஓர் ஒப்பந்தம் ஏற்படுவது மிகவும் சாத்தியமே என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதையடுத்து, ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க கடற்படை மேற்கொண்ட சுதந்திர திட்டத்தை நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

இந்த நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவை பரிசீலித்து வருவதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறியதாவது:- “அமெரிக்காவின் முன்மொழிவை ஈரான் இன்னும் பரிசீலித்து வருகிறது. அந்த பரிசீலனை முடிந்த பிறகு, ஈரான் தனது கருத்தை மத்தியஸ்தம் செய்து வரும் பாகிஸ்தானிடம் தெரிவிக்கும். உண்மையான பேச்சுவார்த்தைகள் கட்டாயத்தின் கீழ் நடைபெற முடியாது. பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையுடன் நடத்தப்பட வேண்டும். பேச்சுவார்த்தைகள் என்பது ஆணையிடுதல், ஏமாற்றுதல், மிரட்டிப் பணம் பறித்தல் அல்லது கட்டாயப்படுத்துதல் ஆக இருக்கக்கூடாது” என்று அவர் கூறினார்.

அமெரிக்காவின் முன்மொழிவு குறித்து ஈரான் இன்று தனது கருத்தை தெரிவிக்க உள்ளது. இதற்கிடையே, ஈரான் புரட்சிகர காவல்படையின் கடற்படை கூறும்போது, “எதிரிகள் மேற்கொள்ளும் எந்தவொரு சாத்தியமான தாக்குதலுக்கும் அவர்களின் கணிப்புகளுக்கு அப்பாற்பட்ட பதிலடி கொடுக்கப்படும். ஆட்சி மாற்ற முயற்சிகள், ஹோர்முஸ் ஜலசந்தியின் மீது கட்டுப்பாட்டைப் பெறுதல் மற்றும் ஈரானின் யுரேனியம் வளங்களைக் கைப்பற்றுதல் உள்ளிட்ட ஈரானுக்கு எதிரான அனைத்து நோக்கங்களிலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தோல்வியடைந்துவிட்டார்” என்று தெரிவித்துள்ளது.

ஈரான் பாராளுமன்றத்தின் தேசியப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ரெசாயி கூறும்போது, “நேருக்கு நேர் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கர்கள் பெறாத எதையும், அவர்கள் தோற்றுக்கொண்டிருக்கும் ஒரு போரில் பெறப்போவதில்லை. தாக்குதலுக்கு ஈரான் தயாராக உள்ளது. அமெரிக்கா சரணடைந்து தேவையான சலுகைகளை வழங்காவிட்டால், ஈரான் கடுமையான மற்றும் வருத்தத்தை ஏற்படுத்தும் பதிலடியைக் கொடுக்கும்” என்றார்.இந்த நிலையில், ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியதாவது:-

“ஈரான் ஒத்துழைக்க இணங்கினால் போர் முடிவுக்கு வரும். மிகவும் பயனுள்ள கடல்வழித் தடை நீக்கப்பட்டு, ஹோர்முஸ் ஜலசந்தி ஈரான் உள்பட அனைவருக்கும் திறந்த நிலையில் இருக்கும். ஈரான் ஒத்துழைக்க சம்மதிக்காவிட்டால் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் தொடங்கும். துரதிர்ஷ்டவசமாக, இத்தாக்குதல்கள் முன்னெப்போதையும் விட மிக உயர்ந்த அளவிலும் தீவிரத்துடனும் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, அடுத்த 48 மணி நேரத்திற்குள் பல முக்கிய அம்சங்கள் குறித்து ஈரானிடமிருந்து பதில்களை எதிர்பார்ப்பதாகவும், மோதல் தொடங்கியதிலிருந்து இரு தரப்பினரும் ஒரு ஒப்பந்தத்திற்கு இவ்வளவு நெருக்கமாக வந்திருப்பது இதுவே முதல் முறை என்றும் அமெரிக்கா தரப்பினர் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com