ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

டிரினிடாட் அண்டு டுபாகோ பள்ளி மாணவர்களுக்கு 2 ஆயிரம் லேப்டாப்களை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.
ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
Published on

போர்ட் ஆப் ஸ்பெயின்,

பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதற்காக அவர் தனி விமானத்தில் கடந்த 2-ந்தேதி கானாவுக்கு புறப்பட்டு சென்றார்.

கானா நாட்டின் ஜனாதிபதி ஜான் திராமணி மகாமா அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

இந்த பயணத்தில், வரலாற்று தன்மை கொண்ட உறவுகளை ஆழப்படுத்தும் நோக்கில் இரு தலைவர்களும் தங்களுடைய பார்வைகளை பரிமாறி கொண்டனர். முதலீடு, எரிசக்தி, சுகாதாரம், பாதுகாப்பு, திறன் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய விசயங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கானா நாட்டுக்கான பயணம் முடிந்து, டிரினிடாட் அண்டு டுபாகோ நாட்டுக்கு பிரதமர் மோடி கடந்த 3-ந்தேதி மாலை புறப்பட்டார். பிரதமர் மோடியின் இந்த பயணம் ஆனது, இரு நாடுகளின் உட்கட்டமைப்பு, மருந்து பொருட்கள், வளர்ச்சி திட்டங்கள், விளையாட்டு, கல்வி, கலாசார பரிமாற்ற திட்டங்கள் மற்றும் தூதரக பயிற்சி உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டது.

பிரதமர் மோடி மற்றும் டிரினிடாட் அண்டு டுபாகோ பிரதமர் கம்லா பெர்சாத்-பிஸ்ஸேசர் இருவரும் சந்தித்து பேசி கொண்டனர். இதன்பின்னர், பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய, தி ஆர்டர் ஆப் தி ரிபப்ளிக் ஆப் டிரினிடாட் அண்டு டுபாகோ என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

அவர்கள் இருவரின் தலைமையில் இரு நாடுகளின் உயர்மட்ட குழுவினர் தலைமையிலான பேச்சுவார்த்தை நடந்தது. இதன் முடிவில், இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இதேபோன்று, அந்நாட்டின் பள்ளி மாணவர்களுக்கு 2 ஆயிரம் லேப்டாப்களை பிரதமர் பரிசாக வழங்கினார். இந்த பயணம் முடிந்ததும், அவர் அர்ஜெண்டினா நாட்டுக்கு புறப்பட்டு செல்கிறார்.

அந்நாட்டு ஜனாதிபதி ஜேவியர் மைலெய் அழைப்பின்பேரில் செல்லும் பிரதமர் மோடி, பாதுகாப்பு, விவசாயம், சுரங்கம், எண்ணெய் மற்றும் எரிவாயு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட முக்கிய துறைகளில் உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஆலோசனைகள் மேற்கொள்ள உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com