அமெரிக்க மந்திரி பாம்பியோவுடன் வடகொரிய அதிகாரி சந்திப்பு

20 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்கா சென்ற முதல் வடகொரிய அதிகாரியான கிம் யாங் சோல், அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவை சந்தித்து பேசினார்.
அமெரிக்க மந்திரி பாம்பியோவுடன் வடகொரிய அதிகாரி சந்திப்பு
Published on

நியூயார்க்,

இரு துருவங்களாக விளங்கி வந்தவர்கள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும். தென்கொரியா அதிபர் மூன் ஜே இன் முயற்சியால், டிரம்ப், கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச முன் வந்தார்.

நீண்ட இழுபறிக்கு பின்னர் இரு பெரும் தலைவர்களும் சிங்கப்பூரில் வரும் 12-ந் தேதி உச்சி மாநாட்டில் சந்தித்து பேச முடிவானது. இது உலக அரங்கை அதிர வைத்ததுடன், மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. ஏனெனில், அமெரிக்கா மற்றும் வடகொரியா தலைவர்கள் இதுவரை சந்தித்துப் பேசியதே இல்லை. அந்த வகையில் டிரம்ப், கிம் ஜாங் அன் சந்திப்பு வரலாற்று சந்திப்பாக அமையப்போகிறது.

இடையிலே அதில் திடீர் குழப்பமும் உருவானது. கடந்த வாரம் திடீரென கிம் ஜாங் அன்னுடனான சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக டிரம்ப் அறிவித்தார். இதுபற்றி அவர் கிம் ஜாங் அன்னுக்கு கடிதமும் எழுதினார்.

ஆனால் பின்னர் திடீர் திருப்பமாக டிரம்ப் சந்திப்பில் வடகொரியா ஆர்வம் காட்டியது. எனவே திட்டமிட்டபடி கிம் ஜாங் அன்னுடன் சிங்கப்பூரில் ஜூன் 12-ந் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என டிரம்ப் அறிவித்தார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்து மட்டத்திலும் முழுவீச்சில் நடந்து கொண்டு இருக்கின்றன.

இதுபற்றி முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக கிம் ஜாங் அன்னின் வலது கரம் என அறியப்படுகிற வடகொரியாவின் உயர் அதிகாரி கிம் யாங் சோல், அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு நேற்று முன்தினம் சென்றார்.

அங்கே ஐ.நா. தலைமையகம் அருகே உள்ள ஒரு கட்டிடத்திற்கு அவரும், அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் தனித்தனியே சென்றனர். அங்கு அவர்கள் இருவரும் சந்தித்து டிரம்ப், கிம் ஜாங் அன் சந்திப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். பேச்சுவார்த்தையில் இடம் பெற வேண்டிய விஷயங்கள் குறித்தும் அவர்கள் விவாதித்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.

இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து கிம் யாங் சோலுக்கு, மைக் பாம்பியோ இரவு விருந்து அளித்து கவுரவித்தார். இதை மைக் பாம்பியோ டுவிட்டரில் தெரிவித்தார். நேற்று இரண்டாவது முறையாக இவ்விருவரும் சந்தித்து பேசியதாக தெரியவந்து உள்ளது.

இதற்கு இடையே கொரிய எல்லையில் அமைந்து உள்ள பான்முன்ஜோமில் தென்கொரியாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் சுங் கிம்மை வடகொரிய வெளியுறவு துணை மந்திரி சோ சன் ஹூய் சந்தித்து பேசி வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சந்தித்து பேசி வருகின்றனர்.

இன்னொரு புறம், டிரம்ப்- கிம் ஜாங் அன் சந்திப்பு நிகழப்போகிற சிங்கப்பூரில், வாஷிங்டன் வெள்ளை மாளிகை அதிகாரி ஜோ ஹேக்கின், வடகொரிய மூத்த அதிகாரி கிம் சாங் சன்னை சந்தித்து பேசி வருகிறார்.

இத்தனை நிகழ்வுகளுக்கு மத்தியில் ரஷிய வெளியுறவு மந்திரி செர்கெய் லாவ்ரோவ், வடகொரியாவின் பியாங்யாங் நகருக்கு சென்று உள்ளார். அவர் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேசினார். மேலும் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

டிரம்ப், கிம் ஜாங் அன் சந்திப்பு பற்றி வாஷிங்டனில் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் நிருபர்களிடம் பேசினார். அப்போது இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதை அவர் உறுதி செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com