அமலுக்கு வந்த சில நிமிடங்களில் ஏமனில் சண்டை நிறுத்தம் முறிந்தது

ஏமனில், அமலுக்கு வந்த சில நிமிடங்களில் சண்டை நிறுத்தம் முறிந்தது.
அமலுக்கு வந்த சில நிமிடங்களில் ஏமனில் சண்டை நிறுத்தம் முறிந்தது
Published on

சனா,

ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி ஆதரவு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 4 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபர் படைக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து வான்தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த போரை முடிவுக்கு கொண்டு வந்து, அமைதியை நிலைநாட்ட ஐ.நா. தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி ஏமனுக்கான ஐ.நா. சிறப்புத் தூதரான மார்ட்டின் கிரிபித்ஸ் முயற்சியால் சுவீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்த இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

அதன் பலனாக கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அந்நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரான ஹூடைடாவில் சண்டை நிறுத்தம் மேற்கொள்ள இரு தரப்பிலும் உடன்பாடு எட்டப்பட்டது. எனினும் அங்கு சவுதி கூட்டுபடைகளின் வான்தாக்குதல்களும், கிளர்ச்சியாளர்களின் பதில் தாக்குதலும் தொடர்ந்து.

இதுபற்றி நேற்று முன்தினம் விளக்கம் அளித்த ஐ.நா. அதிகாரி ஒருவர், ராணுவ ரீதியிலான சில காரணங்களால் சண்டை நிறுத்தத்தை உடனடியாக அமல் படுத்த முடியவில்லை என்றும், திங்கட் கிழமை நள்ளிரவு முதல் சண்டை நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வரும் எனவும் அறிவித்தார்.

அதன்படி ஹூடைடா நகரில் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஆனால் அமலுக்கு வந்த சில நிமிடங்களிலேயே சண்டை நிறுத்தத்தில் முறிவு ஏற்பட்டது. அந்த நகரில் உள்ள கிளர்ச்சியாளர்கள் அரசுப்படையினரை குறிவைத்து பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.

இதனால் இருதரப்புக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடக்கிறது என அரசு ஆதரவு அதிகாரி ஒருவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com