காரில் பெண் பயணியை கடத்திய வழக்கு: இந்திய டிரைவருக்கு 3 ஆண்டு சிறை - அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு

காரில் பெண் பயணியை கடத்திய வழக்கில், இந்திய டிரைவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
காரில் பெண் பயணியை கடத்திய வழக்கு: இந்திய டிரைவருக்கு 3 ஆண்டு சிறை - அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு
Published on

நியூயார்க்,

அமெரிக்காவில் பிரபல வாடகை கார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் ஹர்பீர் பார்மர் (வயது 25). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியூயார்க் மாகாணத்தில் உள்ள மன்ஹாட்டன் நகரில் இருந்து வொயிட் பிலைன்ஸ் நகருக்கு பெண் ஒருவரை தனது வாடகை காரில் அழைத்து சென்றார்.

பயணத்தின் போது அந்த பெண் பயணி அயர்ந்து தூங்கிவிட்டார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஹர்பீர் பார்மர், அதிக கட்டணம் வசூலிக்கும் நோக்கில் செல்போன் செயலி மூலம் பெண் பயணி இறங்க வேண்டிய இடத்தை 100 கி.மீ தூரத்துக்கு மாற்றியமைத்து காரை ஓட்டி சென்றார்.

தூக்கத்தில் இருந்து விழித்த அந்த பெண் தான் செல்ல வேண்டிய இடத்தில் இருந்து வெகு தூரம் வந்துவிட்டதை தெரிந்து கொண்டார். தான் அபாயத்தில் இருப்பதை உணர்ந்த அவர் போலீஸ் நிலையத்துக்கு செல்லும்படி ஹர்பீர் பார்மரிடம் கூறினார். ஆனால் அவர் அந்த பெண்ணை அங்குள்ள நெடுஞ்சாலையில் இறக்கிவிட்டு விட்டு சென்று விட்டார்.

இதையடுத்து, அந்த பெண் ஹர்பீர் பார்மர் தன்னை கடத்தி சென்றதாக போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக ஹர்பீர் பார்மர் கைது செய்யப்பட்டு, நியூயார்க் நகர கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதில் ஹர்பீர் பார்மர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் குற்றவாளி என கடந்த மார்ச் மாதம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இந்தநிலையில் இந்த வழக்கில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்பீர் பார்மருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவருக்கு 3,642 அமெரிக்கா டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2 லட்சத்து 51 ஆயிரம்) அபராதமும் விதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com