

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்த ஒரு தனித்துவமான நுட்பத்தைப் பயன்படுத்தி பெண் ஓருவர் 6 கிலோ அக்ரூட் பருப்புகளில் 3 கிலோ போதைப்பொருட்களை மறைத்து கடத்த முயற்சி செய்துள்ளார். அவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். துபாய் சுங்க துறை இயக்குநர் ஜெனரல் அகமத் மஹபூப் முசாபிக் கூறுகையில், கடத்தல்காரர்கள் புதிய மற்றும் எதிர்பாராத நுட்பங்களை இப்போது கொண்டு வருகிறார்கள். இருப்பினும் 2019 முதல் காலாண்டில் 14 கிலோ போதைப்பொருள் கடத்தலுக்கான பல முயற்சிகளை முறியடித்துள்ளோம் என்றார்.
மற்றொரு வழக்கில் ஒருவர் தனது செல்போனின் பேட்டரியில் போதைப்பொருட்களை மறைத்து கடத்த முயன்றுள்ளார். கடத்தல்காரர்கள் தங்கள் போதை மருந்துகளை பயறு நிரம்பிய பைகள், பொம்மைகள், வாழைப்பழங்கள், சாக்லேட்டுகள் மற்றும் வயிற்றில் மறைக்கிறார்கள். இதனை கண்டுபிடிக்க ஆய்வாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதிநவீன ஸ்கேனிங் சாதனங்களைப் பயன்படுத்துவது மருந்துகளைக் கண்டறிய உதவுகிறது என்று அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.