சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பெண்ணுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றம்

சிங்கப்பூரில் 30 கிராம் போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைதான பெண்ணுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பெண்ணுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றம்
Published on

சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் என்பது மிகப்பெரிய குற்றமாகும். அங்கு கஞ்சா 500 கிராம், ஹெராயின் 15 கிராமுக்கு மேல் கடத்தினாலே தூக்குத்தண்டனை வரை விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது. இதனால் சிறிய அளவில் போதைப்பொருள் கடத்தினாலே தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.

எனவே போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என ஐ.நா. சபை, சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சிங்கப்பூரில் வசிக்கும் சரிதேவி டிஜமானி (வயது 45) என்ற பெண் 31 கிராம் ஹெராயின் கடத்தியதாக கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதால் கடந்த 2018-ம் ஆண்டு அவருக்கு தூக்குத்தண்டனை விதித்து அந்த நாட்டின் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனையடுத்து மேல்முறையீடு, அதிபரிடம் மன்னிப்பு கடிதம் போன்ற நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் இந்த பெண்ணின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என சிங்கப்பூர் அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தன.

இதற்கிடையே அண்டை நாடான தாய்லாந்து கஞ்சா பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்கி உள்ளது. மலேசியாவில் கடுமையான குற்றங்களுக்கு விதிக்கப்படும் கட்டாய மரண தண்டனை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க இந்த தூக்குத்தண்டனை மிக அவசியம் என சிங்கப்பூர் அரசாங்கம் கூறி வருகிறது.

அதனால் சரிதேவி டிஜமானிக்கு நேற்று தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. சிங்கப்பூரில் 19 ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஒருவர் போதைப்பொருள் கடத்தியதற்காக நேற்று தூக்கிலிடப்பட்டு உள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2004-ம் ஆண்டு மே வொன் என்ற பெண் போதைப்பொருள் வழக்கில் தூக்கிலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com