முதல் பெண் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில்... மெக்சிகோவில் நடுரோட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண் மேயர்

மெக்சிகோவில் பெண் மேயர் ஒருவர் நடுரோட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மெக்சிகோ சிட்டி,

அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவில் போதை கும்பல்கள், சட்டவிரோத ஆயுத பரிமாற்றம், பயங்கரவாதம், கள்ளநோட்டு புழக்கம் என நாடு முழுவதும் குற்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

குற்ற சம்பவங்களின் கூடாரமாக விளங்கும் மெக்சிகோவில் நிழல் உலக தாதாக்கள், ரவுடிகள், கூலிப்படையினரை கட்டுப்படுத்த முடியாமல் ஜனநாயகமும், சட்ட திட்டங்களும் செயலிழந்து வருகின்றன. இந்தநிலையில் கடந்த ஜூன் 2-ந்தேதி மெக்சிகோவில் பொதுத்தேர்தல் நடந்தது.

புதிய அதிபர், பிரதிநிதிகள் சபையின் 500 உறுப்பினர்கள், குடியரசு செனட் சபையின் 128 உறுப்பினர்கள் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்நது. இந்த தேர்தலுடன் உள்ளாட்சி தேர்தலும் நடந்து முடிந்தது.

ஒரே கட்டத்தில் நடந்து முடிந்த இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான மொரேனா கட்சியை சேர்ந்த கிளாடியா சீன்பாம் வெற்றி பெற்றார். அவர் 58.75 சதவீத வாக்குகளை பெற்றார். இதன் மூலம் மெக்சிகோவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

மேலும் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மிசோகன் மாகாணம் கோடிஜா நகர் மேயராக யோலன்டா சான்சஸ் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தநிலையில் யோலன்டா உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது வேன் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்த யோலன்டாவை வழிமறித்தது. பின்னர் அதிலிருந்து இறங்கிய மர்ம கும்பல் ஒன்று யோலன்டாவை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியது. இதில் தலை, கழுத்து, மார்பு பகுதி என பல்வேறு இடங்களில் குண்டுகள் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் யோலன்டா சான்சஸ் உயிரிழந்தார்.

மெக்சிகோவில் முதல் பெண் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெண் மேயரை மர்ம நபர்கள் சுட்டு கொன்ற விவகாரம் அங்கே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com