

சார்ஜா,
ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில், மின்கம்பத்தில் சிக்கி உயிருக்கு போராடிய பூனையை சமூக வலைத்தள பிரபலம் ஒருவர் சமயோசிதமாக செயல்பட்டு மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சார்ஜாவை சேர்ந்த பிரபல சமூக வலைத்தள ஆளுமை பாத்திமா அல் சுவைகி. இவர் வழக்கம் போல் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பூனை கத்தும் சத்தம் இவரது காதில் விழுந்துள்ளது.
இதனால் பதறிப்போன அவர், உடனடியாக தனது காரை ஓரமாக நிறுத்திவிட்டு சத்தம் வந்த திசையை நோக்கி தேடினார். அப்போது, அருகிலிருந்த மின்கம்பம் ஒன்றில் பூனை ஒன்று சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவிப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அந்த பூனையை மீட்க பாத்திமா முயற்சி செய்தார். ஆனால், பயத்தின் காரணமாக அந்த பூனை மேலும் சத்தமாக கத்த தொடங்கியது. மின்கம்பம் என்பதால் ஆபத்தை உணர்ந்த அவர், சற்றும் தாமதிக்காமல் சார்ஜா தண்ணீர், மின்சாரம் மற்றும் எரிவாயு ஆணையத்தின் வாடிக்கையாளர் அழைப்பு மையத்திற்கு தொலைபேசியில் தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்ததும் மின்சார ஆணையத்தின் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், அவர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் போராடி, மின்கம்பத்தில் சிக்கியிருந்த பூனையை சிறிது நேரத்தில் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
மீட்பு குழுவினர் மேற்கொண்ட இந்த பணிகளை பாத்திமா அல் சுவைகி தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். ஒரு உயிரை காப்பாற்ற அவர் எடுத்த முயற்சியையும், மீட்பு குழுவினரின் விரைவான நடவடிக்கையையும் பாராட்டி நெட்டிசன்கள் அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.