

டாக்கா,
வங்காளதேசத்தில் ஆனந்தா டி.வி. என்ற தனியார் செய்தி தொலைக்காட்சி சேனல் இயங்கி வருகிறது. இங்கு சுபர்ணா நோடி (வயது 32) என்பவர் பெண் நிருபராக பணியாற்றி வந்துள்ளார்.
டாக்கா நகரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள பப்னா மாவட்டத்தில் உள்ள ராதாநகர் பகுதியில் வசித்து வரும் இவர் டெய்லி ஜக்ரோட்டோ வங்காளம் என்ற பத்திரிகையிலும் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவருக்கு 9 வயதில் மகள் இருக்கிறார். இவரது கணவர் விவாகரத்து தரும் நிலையில் அதற்காக காத்திருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு 10.45 மணியளவில் 10 முதல் 12 பேர் கொண்ட கும்பல் ஒன்று இரு சக்கர வாகனங்களில் வந்து இவரது வீட்டு அழைப்பு மணியை அழுத்தியுள்ளனர்.
இதனால் கதவை திறந்து அவர்களுக்கு பதில் அளித்த நோடியை திடீரென ஆயுதங்களால் தாக்கி விட்டு கும்பல் அங்கிருந்து தப்பியது.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் நோடியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மரணம் அடைந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.
இதனை தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க பல்வேறு குழுக்களை போலீசார் அமைத்துள்ளனர். பப்னாவில் உள்ள பத்திரிகையாளர்கள் நோடியின் கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன் கொலைகாரர்களை உடனடியாக நீதியின் முன் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினர்.