ஸ்கேன், மருத்துவ உதவி இன்றி பசிபிக் சமுத்திரத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்

பெண் ஒருவர் மருத்துவ உதவி, ஸ்கேன் எதுவும் இன்றி பசிபிக் சமுத்திரத்தில் குழந்தை பெற்றெடுத்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
ஸ்கேன், மருத்துவ உதவி இன்றி பசிபிக் சமுத்திரத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்
Published on

மனகுவா,

நிகரகுவா நாட்டில் பிளேயா மஜகுவால் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் ஜோசி புக்கெர்ட் (வயது 37) என்ற பெண் தனது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். அவர் கர்ப்பிணியான காலம் முதல் மருத்துவரை அணுகவோ அல்லது ஸ்கேன் செய்யவோ என எதுவும் மேற்கொள்ளவில்லை. மருத்துவர்களின் உதவி இன்றியே குழந்தை பெற்றும் உள்ளார்.

இவருக்கு கடந்த பிப்ரவரி 27ந்தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு போதி அமோர் ஓசன் கார்னீலியஸ் என பெயரிடப்பட்டு உள்ளது. இதுபற்றி ஜோசி கூறும்போது, சமுத்திரத்தில் குழந்தை பெற்று கொள்ள விரும்பினேன்.

இது எனது யோசனையில் இருந்தது. அதனுடன், அன்றைய தினம் சூழ்நிலைகளும் சரியாக இருந்தன. அதனால், சமுத்திரத்தில் குழந்தையை பெற்று கொண்டேன் என கூறியுள்ளார்.

இதற்காக பல வாரங்களாக அலையை கண்காணித்து வந்தேன். பின்பு குழந்தை பெற்றெடுக்க சரியான நேரம் வந்தபோது, பீச் பாதுகாப்புடன் இருக்கும் என தெரிந்து கொண்டேன் என கூறுகிறார்.

ஜோசிக்கு பிரசவ வலி வரப்போகிறது என தெரிந்ததும், அவரது குழந்தைகள் நண்பர்களுடன் தங்க வைக்கப்பட்டனர். அவரது கணவர், ஜோசியை வாகனத்தில் அழைத்து கொண்டு பீச்சுக்கு சென்றுள்ளார். உடன் துண்டுகள், நஞ்சுக்கொடியை எடுக்க பயன்படுத்த சல்லடை, ஒரு கிண்ணம், துணி வலை மற்றும் காகித துண்டுகள் உள்ளிட்ட குழந்தை பிறப்புக்கான உபகரணம் ஒன்றும் எடுத்து சென்றுள்ளார்.

ஏற்கனவே 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள ஜோசி, அலைகளின் ஓசை உண்மையில் என்னை நன்றாக உணர செய்தது என கூறுகிறார். இதுபற்றி அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், பசிபிக் சமுத்திர கடலோரம் பிரசவத்திற்கு முன் அமர்ந்து இருப்பது போன்றும் மற்றொரு வீடியோவில், தொப்புள் கொடியுடன் புதிதாக பிறந்த தனது மகனை கையில் வைத்திருக்கும் காட்சிகளும் உள்ளன.

இந்த முறையில் குழந்தை பெற்றெடுத்ததற்கு பலர் பாராட்டுகளை தெரிவித்தபோதிலும், ஒரு சிலர் விமர்சனமும் செய்துள்ளனர். இது தூய்மையானதா? கடலில் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன என ஒருவர் தெரிவித்து உள்ளார். இதேபோன்று மற்றொருவர், வெப்பம் நிறைந்த கருவறையில் இருந்து குளிரான சமுத்திரத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும் என தெரிவித்து உள்ளார்.

ஆனால் அதற்கு ஜோஷி கூறும்போது, போதி நண்பகலில் சூரிய வெப்பம் 35 டிகிரி இருக்கும்போது பிறந்துள்ளான். அதனால், அவனுக்கு குளிர் ஏற்படும் என நாங்கள் கவலை கொள்ளவில்லை. நீர்சார்ந்த தொற்றுகளை பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை. அவன் ஆரோக்கியமுடனேயே இருக்கிறான். இதற்காக தேவையான அனைத்து ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு, இது பாதுகாப்பானது என உறுதி செய்தே குழந்தை பெற்றெடுத்தேன் என்று அவர் கூறுகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com