

கான்பெர்ரா,
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலீபான்கள் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு 7 மாதங்களுக்கு பிறகு பெண்கள் உயர்நிலை பள்ளிகள் கடந்த 23-ந்தேதி திறக்கப்பட்டன. மாணவிகள் அவைரும் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு சென்ற நிலையில், திறந்த சில மணி நேரத்திலேயே பள்ளிகளை மூட தலீபான்கள் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, 6-ம் வகுப்பு மேல் படிக்கும் மாணவிகள் பள்ளிக்கூடங்கள் செல்ல தடைவிதிப்பதாக தலீபான்கள் அறிவித்தனர். இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க அணுமதிக்க வேண்டுமென 16 நாடுகளின் பெண் வெளியுறவு மந்திரிகள் தலீபான்களை வலியுறுத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட 16 நாடுகளின் பெண் வெளியுறவு மந்திரிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், பெண்கள் மற்றும் வெளியுறவு மந்திரிகள் என்ற வகையில், ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதைக் கண்டு நாங்கள் ஆழ்ந்த ஏமாற்றமும், கவலையும் அடைகிறோம்.
எந்தவித பாரபட்சமும் இன்றி அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என தலீபான்கள் உறுதியளித்திருந்த நிலையில், அவர்களின் இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
எனவே தலீபான்கள் தங்களின் முடிவை திரும்பப்பெற்று அனைத்து பெண்களும் கல்வி கற்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என கூறப்பட்டுள்ளது.